Last Updated : 03 Sep, 2020 08:24 PM

 

Published : 03 Sep 2020 08:24 PM
Last Updated : 03 Sep 2020 08:24 PM

முன்னோரை வணங்கினால் நம் வாரிசுகளுக்கு பலம்; பலன்!  

மகாளய பட்சம் எனும் காலத்திலாவது தர்ப்பண காரியங்களையும் முன்னோர்களுக்கான படையல்களையும் காகத்துக்கு உணவிடுவதையும் அவர்களை நினைத்து நம்மால் முடிந்த தான தருமங்களையும் செய்வோம். முன்னோர்களை நாம் ஆராதனை செய்தால், நம் வாரிசுகள் குறைவுமின்றி நிம்மதியும் நிறைவுமாக வாழ்வார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் என மிக பிரமாண்டமாகப் பரந்து விரிந்திருக்கிற இந்தப் பிரபஞ்சத்தில், நாம் வசிக்கும் இந்த உலகம் ஒரு துளி! நாம் எப்படி இந்த உலகுக்கு வந்தோம்? நம்மையும் இந்த உலகையும், உலகத்து மக்களையும், அண்ட சராசரங்களையும் படைத்தது இறைவன்தானே!

அனைத்து இடங்களிலும், எல்லோர் வீடுகளிலும் இருந்துகொண்டு, நம்மை போஷிப்பதற்காகவே தாய்- தந்தையரைப் படைத்து, அவர்களின் மூலமாக இந்த உலகுக்கு நம்மை அனுப்பிவைத்து அருளினார் கடவுள். அதனால்தான், நம்மை இந்த உலகுக்கு வழங்கி, சீராட்டிப் பாலூட்டி வளர்த்த பெற்றோரை, ‘தந்தை- தாய் பேண்’ என்றும், ‘நன்றி மறவேல்’ என்றும் சொல்லி, பெற்றோரைப் பராமரிப்பதை ஓர் அத்தியாவசிய, மிக முக்கியக் கடமையாகப் பணித்து வைத்தது இந்து தர்ம சாஸ்திரம்.

ஒரு மனிதன் இறந்த பிறகு, அவனது கர்ம வினைகளுக்கு ஏற்ப, சில காலங்களுக்குப் பிறகு மறுபிறவி எடுத்து, தன் கர்மவினைகளை நீக்கிக்கொள்ள முனைகிறான். வினைகள் யாவும் முழுவதுமாக நீங்கிய பிறகு, மோட்சத்தை அடைகிறான் என்கிறது தர்ம சாஸ்திரம்.
‘ஆத்மா வை புத்ர நாம ஆஸீத்’ என்கிறது வேதம்.

அதாவது, தாய்- தந்தையின் மற்றொரு வடிவமும் உருவமும்தான் நாம். அதேபோல, நாமே நம்முடைய குழந்தையாகவும் பிறக்கிறோம்; இருக்கிறோம். அதாவது, பெற்றவர்களின் பிரதியாக நாமும், நம்முடைய பிரதியாக குழந்தைகளும் என சங்கிலித் தொடர் போலானது இந்த மனிதப் பிறப்பு என விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வேதம் சொல்லும் இந்த வாக்கியம், நமக்கும் நம் முன்னோர்களுக்குமான தொடர்பைத் தெளிவுற விளக்குகிறதுதானே.

நம் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்றாலும், அடுத்து வேறு பிறவி எடுத்தாலும், நம்மிலும் நம் சந்ததியிலும் அவர்களின் தொடர்பு இருப்பதால் நம் முன்னோர்களுக்கான நன்றியை, மரியாதையை, வணக்கத்தை, கடமையை சிராத்தம், தர்ப்பணம் முதலான சடங்காகச் செய்கிறோம். அப்போது, பித்ருக்களின் பசிக்கும் தாகத்துக்குமாக எள்ளும் தண்ணீரும் அர்ப்பணிக்கிறோம்.

ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உள்ளன என்றும் இந்த தர்ப்பணங்களைச் செய்வதுதான் நம் ஒவ்வொருவருடைய தலையாயக் கடமை என்றும் சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

பூலோகத்தில் வாழ்ந்து மறைந்து பித்ரு லோகத்துக்குச் சென்றவர்கள், நம் முன்னோர்கள். அவர்கள், மகாளய பட்சம் என்கிற புண்ணிய காலத்தில், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வருகிறார்கள். நம்முடைய வீட்டு வாசலில் நின்று கொண்டு, இந்தக் காலகட்டத்தில் நாம் செய்யக்கூடிய முன்னோர் ஆராதனைகளை, அதாவது அவர்களுக்கான ஆராதனைகளை செய்வதைப் பார்த்து மகிழ்கிறார்கள். நெகிழ்கிறார்கள். நம்மைக் குளிரக் குளிர ஆசீர்வதிக்கிறார்கள்.

அதனால்தான், மகாளய பட்சம் எனும் காலத்திலாவது தர்ப்பண காரியங்களையும் முன்னோர்களுக்கான படையல்களையும் காகத்துக்கு உணவிடுவதையும் அவர்களை நினைத்து நம்மால் முடிந்த தான தருமங்களையும் செய்வோம். முன்னோர்களை நாம் ஆராதனை செய்தால், நம் வாரிசுகள் ஒரு குறைவுமின்றி நிம்மதியும் நிறைவுமாக வாழ்வார்கள், பலம் பெறுவார்கள், பலன் பெறுவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x