

மகாளய பட்சத்தில், நம் முன்னோர்கள் மட்டுமின்றி நம் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர்கள், நமக்குப் பிடித்தமான உறவுக்காரர்களுக்குக் கூட தர்ப்பணம் செய்யலாம்.
இவர்களை காருணிக பித்ருக்கள் என்கிறது சாஸ்திரம்.
மகாளய பட்ச காலம் என்பது புண்ணியம் நிறைந்த நாட்கள். மகாளய பட்சம் என்பது பதினைந்து நாட்கள். ஆவணி மாதத்தின் பெளர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையில் இருந்து மகாளய பட்சம் தொடங்குகிறது. இந்த பதினைந்து நாட்கள் என்பது நம் பித்ருக்கள் அதாவது முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்துக்கு வருகிறார்கள். வந்து, நம் வீட்டை சூட்சும ரூபமாகப் பார்க்கிறார்கள். நம் குடும்பத்தின் நிலையை அறிந்து கொண்டு நம்மை ஆசீர்வதிக்கிறார்கள். தினமும் அவர்களுக்காக நாம் எள்ளும் தண்ணீரும் விட்டு, அர்க்யம் செய்து தர்ப்பணம் செய்வதை ஏற்றுக் கொள்கிறார்கள்.
அத்துடன், இந்த பதினைந்து நாட்களில், நாம் யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்கிறோமோ அவர்களெல்லாம் நம் வீட்டுக்கு வந்து, நம் வீட்டுக் கவலைகளையும் கஷ்டங்களையும் துக்கங்களையும் துடைத்து ஆசீர்வதிக்கிறார்கள் என்பது ஐதீகம்.
மாற்றாந்தாய் (ஸபத்னீமாதரம்), பெரியப்பா (ஜ்யேஷ்டபித்ருவ்யம்), சித்தப்பா (கனிஷ்டபித்ருவ்யம்), சகோதரன் (ப்ராதரம்), மகன்கள் (புத்ரம்), அத்தை (பித்ருஷ்வஸாரம்), தாய்மாமன் (மாதுலம்), தாய்வழி சகோதரி (மாத்ருஷ்வஸாரம்), வளர்ப்புத்தாய் (தாத்ரிம்), சகோதரி (பகினீம்) என்பவர்களுக்கு மகாளய பட்ச காலத்தில், சாஸ்திரத்தில் தர்ப்பணம் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மகள் (துஹிதரம்), மனைவி (பார்யாம்), மாமனார் (ச்வசுரம்), மாமியார் (ச்வச்ரூம்), சகோதரியின் கணவர் (பாவுகம்), மருமகள் (ஸ்னுஷாம்), மச்சினன் (ஸ்யாலகம்), ஒன்று விட்ட சகோதரன் (பித்ருவ்யபுத்ரம்), மாப்பிள்ளை (ஜாமாதரம்), மருமகன் (பாகினேயம்), குரு (குரூன்), ஆச்சார்யன் (ஆச்சார்யான்), தோழன் (ஸகீன்) என்று விவரிக்கிறது தர்ம சாஸ்திரம்.
மேலும் நம் பித்ருக்களை நினைத்து, முன்னோர்களை நினைத்து, மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் செய்வதுடன், அவர்களை நினைத்து இயலாதவர்களுக்கு நம்மால் முடிந்த ஏதேனும் உதவியை, பொருளை தானமாக வழங்குவது இன்னும் புண்ணியத்தைச் சேர்க்கும். பித்ரு ஆசியைப் பெற்று இனிதே வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.