

அகால மரணம் அடைந்தவர்கள், துர்மரணம் கொண்டவர்கள், தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்கள், திருமணம் செய்துகொள்ளாமல் இறந்தவர்கள், வாரிசு இல்லாமல் இறந்தவர்கள் என்று மகாளய பட்ச காலத்தில் நாம் இவர்களுக்காகவும் கூட தர்ப்பணம் செய்யலாம் என்கிறது சாஸ்திரம்.
பொதுவாக, நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்த முன்னோர்களுக்குத்தான் தர்ப்பணம் செய்து வருகிறோம். அதுதான் வழக்கம். மாதந்தோறும் அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம், சிராத்தம் முதலான நாட்களில், நம் குடும்பத்தைச் சேர்ந்த, நம் வம்சத்தின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவோம்.
ஆனால், மகாளய பட்ச காலகட்டமான பதினைந்து நாட்களும், நாம் யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம். யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம் என்றதும் எல்லோரும் நினைத்துவிடக்கூடாது. தாய், தந்தை இல்லாதவர்கள்தான் நம் முன்னோர்களுக்கே கூட தர்ப்பணம் செய்யவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மகாளய பட்ச காலம் என்பது இறந்துவிட்ட ஆன்மாக்களுக்கான காலம் .இந்தக் காலகட்டத்தில், இந்த பதினைந்து நாட்களும், யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்து அவர்களின் ஆன்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்துகொள்ளலாம்.
நம் குடும்பத்திலோ அல்லது நமக்கு உறவுகளில் தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் இல்லங்களில் சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம். பிறந்து குழந்தையாக இருக்கும்போது இறந்திருக்கலாம். சிலர், விபத்து முதலான அகால மரணம் அடைந்திருக்கலாம். இன்னும் சிலர், வாழ்க்கையில் உண்மையான அன்பு கிடைக்காததாலோ பொருளாதாரப் பிரச்சினையாலோ அல்லது வேறு பல காரணங்களாலோ தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கலாம். அந்த ஆத்மாக்கள் அனைத்தும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த காலமே மகாளய பட்ச புண்ய காலம் என்கிறது சாஸ்திரம்.
ஆயு: புத்ரான் யச: ஸ்வர்கம்
கீர்த்திம் புஷ்டிம் பலம் ஸ்ரீஇயம்
பசூன் சுகம் தனம் தான்யம்
ப்ராப்னுயாத் பித்ரு பூஜனாத்
என்ற மந்திரத்தைச் சொல்லி தர்ப்பணம் செய்யவேண்டும்.
நம்மால் முடிந்த அளவுக்கு, இந்த பதினைந்து நாட்களும், மகாளய பட்ச காலங்களில், சிறந்த முறையில் கர்ம சிரத்தையோடு முன்னோர்களையும் இவர்களையும் வழிபட்டால், தீர்க்க ஆயுள் கூடும். நல்ல குழந்தைகள் பிறப்பார்கள். அன்பான குழந்தைகளாக வளருவார்கள். நிலையான புகழ் கிடைக்கும். ஆரோக்கியம் கூடும். செல்வம் பெருகும். பசுக்களால் உண்டாகும் பலனும், வாழ்வில் நிலையான இன்பமும், தனம் - தானியம் சேர்க்கையும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த மகாளய பட்சத்தில், அனைத்து நாட்களிலும் தர்ப்பணம் செய்வது விசேஷம். இயலாதவர்கள், மகாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும் நம்பிக்கையுடனும் முன்னோர் கடனை அளிப்பது மிகுந்த பலனைத் தரும்.
பொதுவாக, இந்தப் பதினைந்து நாட்களும் வீட்டில் வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் செய்யாமல், நம் முன்னோர்கள் குறித்துப் பேசுவதும், அவர்களின் பெயரில் ஏழை எளியவர் ளுக்கு நம்மால் முடிந்த தான- தர்மங்கள் செய்வதும் அளவற்ற பலன்களை அள்ளித் தரும்.