

மகாளய பட்ச காலத்தில்,நாம் யாருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம் என்பது தெரியும்தானே .உங்கள் வாழ்க்கையில், உங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களில் ஒரு சிலர் இறந்திருப்பார்கள். அவர்களுக்காகவும் நீங்கள் இந்த மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் செய்யலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வேறொரு நாட்டில் இருக்கும் நண்பர் அல்லது உறவினருக்கு நாம் அனுப்பும் பணமானது, எப்படி அந்த நாட்டில் உள்ள மதிப்பின்படி அவருக்குப் போய்ச் சேருகிறதோ, அதேபோல் நாம் இங்கே செய்யும் பித்ரு கடனானது அதாவது கடமையானது, அவர்கள் எந்த உருவில் இருக்கிறார்களோ அவர்களுக்கு உரிய முறையில் போய்ச் சேரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்கிறது சாஸ்திரம்.
நம் தாய்- தந்தை மற்றும் அவர்களின் முன்னோர்கள் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு, பித்ருக்கள் எனப் போற்றப்படுகிறார்கள். நாம் வாழ்வது பூலோகத்தில். அவர்கள் வாழ்வதும் லோகத்தில்தான். அதாவது பித்ருலோகத்தில்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை முதலான முக்கியமான நாட்களில் அவரவரின் வீடுகளுக்குப் பித்ருக்கள் வந்து, வாசற்படிக்கு முன் நின்று, தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை, ஆராதனைகளை, உணவுகளை ஏற்று, ஆசீர்வதித்துச் செல்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.
அதேவேளையில், சிறப்பாகவும் சிரத்தயாகவும் தர்ப்பணம் செய்யாமல் விட்டு, அதனால் அவர்கள் மனவருத்தம் அடைந்தால், அது சாபமாக மாறி நம்மைப் பாதிப்பதாகவும் சாஸ்திரங்கள் எடுத்துரைக்கின்றன.
இந்தக் காலத்தில் பித்ருக்களுக்கான ஆராதனையை உரிய நாளில் செய்பவர்கள் மிகச் சிலர்தான்! பலர் ஆசைப்பட்டும், பல்வேறு காரணங்களால் செய்யாது விடுகின்றனர்.
அப்படியெனில், செய்யாதவர்களுக்கு என்ன வழி?
நிச்சயமாக உண்டு. எல்லாவற்றுக்கும் ஒரு வழியை உண்டுபண்ணிவைத்திருக்கிறது சாஸ்திரம்.
ஆவணி மாதத்தில் பௌர்ணமியை அடுத்த தேய்பிறை நாட்கள் மகாளய பட்ச நாட்கள். இந்த நாளில் இருந்து அதாவது பெளர்ணமியை அடுத்து உள்ள பிரதமையில் இருந்து வருகிற அடுத்தடுத்த பதினைந்து நாட்களும், மிகப் பெரிய ஆற்றல் நிறைந்தவை. முன்னோர்களுக்கான நாட்கள் இவை. இவற்றை மகாளய பட்ச புண்ய காலம் என்பார்கள்.
தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா, தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா- பாட்டி என மூன்று தலைமுறையினருக்கு ஒவ்வொரு மாத அமாவாசையிலும் தமிழ் மாதப் பிறப்பிலும் தர்ப்பணம் கொடுக்கிறோம்.
இந்த மகாளய பட்ச புண்ணிய காலத்தில், இவர்களுக்கு செய்வது மட்டுமல்லாது, நம்முடைய ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் தெரிந்தவர்கள், தலைவர்கள், நமக்கு விருப்பமானவர்கள், வாரிசு இல்லாமல் இறந்துவிட்டவர்கள் என எவருக்கு வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்யலாம்.
அப்படிச் செய்யும்போது, நமக்கும் நம் சந்ததிக்குமான நன்மைகளும் பலன்களும் அதிக அளவில் கிடைக்கும். அத்துடன் இதுவரை நம்மைப் பீடித்திருந்த பித்ரு முதலான தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும். பித்ரு சாபம் நீங்கிவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.