

மகாளய பட்ச காலத்தில் ஒவ்வொரு நாளும் நாம் முன்னோர் ஆராதனையைச் செய்யச் செய்ய, அவர்கள் நாம் செய்யும் ஆராதனையை ஏற்றுக்கொள்வதற்காக, நம் வீட்டுக்கு வருகிறார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகணங்கள் என மறக்காமல் தர்ப்பணம் கொடுப்பது அவசியம். நல்லதும் கூட. அதேபோல், மகாளய நாட்களிலும் தொடர்ந்து தர்ப்பணம் செய்வது குடும்பத்துக்கு மிகப்பெரிய பலத்தையும் பலனையும் கொடுக்கும்.
பூலோகம் போல் பித்ரு லோகமும் உண்டு. அங்கே நம் முன்னோர்கள் அவரவரின் கர்மவினைக்குத் தக்கபடியான நிலையில் இருப்பார்கள். நாம் செய்யும் தர்ப்பணமும் எள்ளும் தண்ணீரும்தான் அவர்களின் தாகத்தைத் தணிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மறுபிறவி உண்டு என்று தர்ம சாஸ்திரம் தெரிவிக்கிறது. அப்படியெனில், முன்னோர்களும் மறுபிறவி எடுத்திருப்பார்களே என்று எவரேனும் கேட்கலாம். அவர்களுக்குத் தர்ப்பணம் செய்யவேண்டுமா என்றும் குழம்பலாம்.
எப்படியிருப்பினும் முன்வினையால் செய்த கர்மவினைப்படி மறுபிறவியில் எங்கோ பிறந்து வாழ்ந்திருக்க... அவர்களை நினைத்து, அவர்களின் முந்தைய பிறவியையொட்டி நாம் செய்யும் தர்ப்பணம் அவர்களைப் போய்ச் சேரும். இதனால் அவர்களும் தர்ப்பணம் செய்ததால் நாமும் சுபிட்சமாகவும் நிம்மதியாகவும் வாழ்வோம்!
மகாளய பட்ச புண்ய காலமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள், நாம் அவர்களை நினைத்து வழிபடுவதைப் பார்க்க வருவார்கள் என்பது ஐதீகம்!
எனவே, மகாளய பட்ச காலத்தில் ஒவ்வொரு நாளும் நாம் முன்னோர் ஆராதனையைச் செய்யச் செய்ய, அவர்கள் நாம் செய்யும் ஆராதனையை ஏற்றுக்கொள்வதற்காக, நம் வீட்டுக்கு வருகிறார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சூட்சுமமாக நம் வீட்டுக்கு வரும் முன்னோர்களை ஆராதிப்போம். பூஜிப்போம். பிரார்த்திப்போம்.