

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பக்தர்கள் நேரடியாக அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு, சுவாமி தரிசனம் செய்யலாம். ஆன்லைன் (இணையதளம்) மூலமாகவும் அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு சுவாமி தரிசனம் செய்யலாம் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில். ஆனந்தத் தியாகர் என்றும் சிவனாருக்கு திருநாமம் உண்டு. படம்பக்க நாதர் என்றும் புற்றிடங்கொண்டார் என்றும் பல திருநாமங்கள் உண்டு. என்றாலும் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் என்றால்தான் பக்தர்களுக்கு சட்டென்று புரிபடும்.
திருவொற்றியூர் தியாகேசர் கோயில், புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம். இங்கே அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி. ஆனால் வடிவுடையம்மன் என்று மற்றொரு பெயரைக் கொண்டுதான் பக்தர்கள் அழைக்கின்றனர்.
27 நட்சத்திரங்களும் வழிபட்ட ஒப்பற்ற திருத்தலம். ஆகவே எந்த நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டாலும் உடனே அவர்களின் கோரிக்கைகளையும் வேண்டுதலையும் உடனே நிறைவேற்றித் தருவார்கள் வடிவுடையம்மனும் தியாகராஜ சுவாமியும்!
27 நட்சத்திரங்கள் மட்டுமின்றி அவர்களின் கணவரான சந்திரன், மகாவிஷ்ணு, படைப்புக் கடவுளான பிரம்மா, வால்மீகி முனிவர் உள்ளிட்ட தெய்வங்களும் தெய்வ முனிவர்களும் வழிபட்டு சிவனருள் பெற்ற புண்ணிய பூமி என்று சொல்லிச் சிலாகிக்கிறது ஸ்தல புராணம்.
இங்கே உள்ள காளிதேவியை வட்டப்பாறை அம்மன் என அழைக்கிறார்கள். கடும் உக்கிரத்துடன் இருந்த காளியை, ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
நேற்று 1ம் தேதி முதல் தமிழகத்தில் கோயில்கள் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகக் கோயில்களில் நேற்று செப்டம்பர் ம் தேதியில் இருந்து பக்தர்கள் வழக்கம் போல், சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
பெருமைமிகு திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலிலும் நேற்று முதல் சுவாமி தரிசனம் தொடங்கியது. இன்று 2ம் தேதி புதன்கிழமை முதல், நேரடியாகவும் மற்றும் இணைய வழி (ஆன்லைன்) அனுமதிச் சீட்டு பெற்று தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலின் இணையதள முகவரியில் https://tnhrce.gov.in/eservices/dharshanbooking_index.php?tid=81&catcode=6
ஆன்லைன் மூலம் அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். நேரடியாகவும் அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு, சுவாமி தரிசனம் செய்யலாம் என ஆலய நிர்வகம் தெரிவித்துள்ளது.