

வைகுண்ட வாசுதேவன், குணசீல மகரிஷியின் தவத்தை மெச்சி,ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசனாகக் காட்சியளித்த அற்புத ஷேத்திரம் குணசீலம். இத்திருத்தலம் திருச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ தொலைவில் காவேரி நதியின் அழகிய வடகரையில் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் எம்பெருமான்,ஸ்ரீ பிரஸன்ன வேங்கடேசன் என்ற திருநாமத்துடன் நின்ற திருகோலத்தில் காட்சியளிக்கிறார். சங்கம், சக்கரம், வரதஹஸ்தம், கடிஹஸ்தத்துடன் திருமார்பில் இலக்குமியைத் தாங்கி சேவை சாதிக்கும் எம்பெருமான், வலக்கையில் செங்கோல் ஏந்தியிருக்கிறார். இச்செங்கோலினாலேயே மனநலக் கோளாறுகளை பெருமாள் நிவர்த்தி செய்வதாக ஐதிகம். மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் இத்திருத்தலத்தில் 48 நாட்கள் தங்கி விரத முறைகளை மேற்கொண்டு காவேரி நதியில் நீராடி எம்பெருமானை வழிபட்டால் அவ்வினைகள் யாவும் நீங்குவதாக நம்பிக்கை.
திருப்பதி எம்பெருமானே குணசீல மகரிஷிக்குக் காட்சியளித்ததால் திருப்பதிக்குச் சென்று தங்களது பிரார்த்தனை களைச் செலுத்த இயலாதோரும் அந்தப் பிரார்த்தனைகளை இப்பெருமானிடத்தில் செலுத்தி நிறைவு செய்து வருகின்றனர். ஆகவே தென் திருப்பதி என இத்திருத்தலம் போற்றப்படுவது குறிப்பிடத் தக்கது.
குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில் பிரம்மோத்ஸவம் 15.09.15 முதல் 26.09.15 வரை, குணசீலத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் அன்ன வாகனத்துடன் தொடங்கும் உற்சவத்தில் சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், தங்க கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், திருக்கல்யாண உற்சவத்தன்று புஷ்பக விமானம், மறுநாள் பல்லக்கில் வெண்ணெய்த் தாழி சேவை, குதிரை வாகனம், 24.09.15 வியாழக்கிழமையன்று திருத்தேர், திருமஞ்சனம், ஆடும் பல்லக்கு ஆகியவற்றில், பெருமாள் எழுந்தருளிக் காட்சி அளிப்பார்.
இந்த விழாவில் 20, 21, 22 ஆகிய நாட்களில் மூலவருக்கு முத்தங்கி சேவையும், இதர நாட்களில் சர்வ அலங்கார சேவையும் நடைபெறும். திருவிழா நடைபெறும் 8, 9, 10 ஆகிய உற்சவ நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் இரவு 9.30 மணிக்குக் கண்ணாடி அறை சேவை நடைபெறும்.