

கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லிவைத்திருக்கிறார்கள். ‘நல்லாப் படிச்சா, நல்ல உத்தியோகத்துக்குப் போகலாம்’ என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே’ எனும் முதுமொழி கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அப்பேர்ப்பட்ட கல்வியை வழங்கும் கடவுளாக திருக்காட்சி தருகிறார் ஸ்ரீஹயக்ரீவர்.
அசுரர்களுக்கு எப்போதுமே தேவர்களையும் முனிவர்பெருமக்களையும் சீண்டிப்பார்ப்பதே வேலை. மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தார்கள். முனிவர்களை தபஸ் செய்யவிடாமல் இடைஞ்சல்கள் கொடுத்து வந்தார்கள்.
இவர்களை மட்டுமா? வேதங்களைக் கொண்டு பிரம்மா தன் படைப்புத் தொழிலை நடத்தி வந்தார். அந்த வேதங்களையெல்லாம் அசுரர்கள் திருடிக் கொண்டுபோய் மறைத்து வைத்துக்கொண்டார்கள். அனைவரும் அசுரர்களின் அசுரத்தனத்தை, மகாவிஷ்ணுவிடம் வேண்டுகோளாக வைத்து முறையிட்டார்கள்.
உடனே மகாவிஷ்ணு, குதிரை முகமும் மனித உடலும் கொண்டு உருவெடுத்தார். அந்த உருவம் அசுரர்களுடன் போரிட்டது. அசுரர்களை அழித்தது. வேதங்களை மீட்டுக்கொண்டு வந்து கொடுத்தது. பிரம்மா தன் படைப்புத் தொழிலைத் தொடர்ந்தார். தேவர்கள் மகிழ்ந்தார்கள். முனிவர்கள் வழக்கம் போல், தவத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். குதிரை முகமும் மனித உடலும் கொண்டவர்தான்... வேதங்களை மீட்டுக் கொடுத்தவர்தான்... ஸ்ரீஹயக்ரீவர்.
ஆலயங்கள் பலவற்றில் ஸ்ரீஹயக்ரீவருக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. சில ஊர்களில் தனிக்கோயிலே அமைந்திருக்கிறது.
அசுரர்களை அழித்தொழித்த பிறகும் உக்கிரம் குறையாமல் கடும் கோபமும் ரெளத்திரமுமாக இருந்தார் ஹயக்ரீவர். அதை அறிந்த ஸ்ரீமகாலக்ஷ்மி, ஹயக்ரீவர் அருகில் வந்தார். இல்லாளைக் கண்டதும் குளிர்ந்து போனார். மகிழ்ச்சியுடன் தன் மடியில் மகாலக்ஷ்மியை அமர வைத்துக்கொண்டார். சில ஆலயங்களில், லக்ஷ்மியை மடியில் அமர வைத்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஹயக்ரீவர். இவருக்கு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் என்றே திருநாமம் அமைந்தது.
வேதங்களை மீட்ட ஹயக்ரீவர், கல்விக் கடவுள் என்றே அழைக்கப்படுகிறார். குழந்தைகளுக்கு கலை, கல்வி முதலான வித்தைகளை தந்து அருளுகிறார். ஞானம் தரும் கடவுள் இவர் என்று சொல்லி சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆவணி மாதத்தின் திருவோண நட்சத்திரம்தான் ஹயக்ரீவர் அவதரித்த ஜன்ம நட்சத்திர நன்னாள் என்கிறது புராணம். அதேபோல், இதேநாளில்தான் வாமன அவதாரம் நிகழ்ந்ததாகச் சொல்கிறது புராணம்.
புதன் என்பதே புத்தியைத் தெளிவாக்கும் புதன் பகவானுக்கு உரிய நாள். புத்தியில் தெளிவையும் சிந்தனையில் தெளிவையும் செயலில் தெளிவையும் ஞானத்தையும் ஞாபகசக்தியையும் வழங்கி அருளுகிற ஹயக்ரீவரையும் புதன்கிழமையிலும் சனிக்கிழமையிலும் வணங்குவது விசேஷம் என்கிறார்கள்.
முக்கியமாக... இன்று ஸ்ரீஹயக்ரீவ ஜயந்தித் திருநாள். ஹயக்ரீவரை மனதார வழிபடுவோம்.
ஸ்ரீஹயக்ரீவர் ஸ்லோகம் :
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே
அதாவது, ‘ஞானமும் ஆனந்தநிலையுமாக இருக்கும் தேவனே. ஸ்படிகத்தைப் போல் தூய்மை நிறைந்தவனே. நல்ல தேகத்தைக் கொண்டவனே. சகலவிதமான கலைகளுக்கும் கலைகளுக்கும் ஆதாரமாய் இருப்பவனே. ஹயக்ரீவ சுவாமியே... உன்னை வணங்குகிறேன்’ என்று அர்த்தம்.
இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, ஹயக்ரீவரை மாணவ மாணவிகள் வழிபட்டு வந்தால், கல்வியில் சிறந்து திகழ்வார்கள். ஒளிர்வார்கள்.
இந்தநாளில், வீட்டில் விளக்கேற்றி, ஹயக்ரீவர் படத்துக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வழிபடலாம். ஹயக்ரீவர் படமில்லையெனில், பெருமாளுக்கு ஏலக்காய் நைவேத்தியம் செய்து, அதை குழந்தைகள், மாணவ மாணவிகள் பிரசாதமாக சாப்பிடலாம்.
மேலும் ஹயக்ரீவருக்கு பானக நைவேத்தியம் செய்து வழிபட்டு, அதனை பிரசாதமாக அருந்தினால், ஞாபகசக்தியைத் தந்தருள்வார். கல்வியில் சிறந்துவிளங்கச் செய்வார் ஸ்ரீஹயக்ரீவர்.
ஹயக்ரீவ ஜயந்தி நன்னாளில், ஹயக்ரீவரை வணங்குவோம். குழந்தைகளை வணங்கச் சொல்வோம். கல்விஞானம் பெறுவோம். புத்தியில் தெளிவு பெறுவோம்!