இனி உங்களுக்கு சுக்கிர யோகம்தான்!  - ஐஸ்வர்யம் தரும் சுக்கிர பகவான் வழிபாடு

இனி உங்களுக்கு சுக்கிர யோகம்தான்!  - ஐஸ்வர்யம் தரும் சுக்கிர பகவான் வழிபாடு
Updated on
1 min read

சுக்கிர பகவானை வழிபட்டு வந்தால், வாழ்வில் சுக்கிர பலம் பெறலாம். சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

எந்தவொரு பலனை அடைவதற்கும் குருவின் அருள் மிக மிக அவசியம். குருவின் அருளிருந்தால்தான் சகல யோகத்தையும் பெறமுடியும். மற்ற கிரகங்களின் அருள் கிடைப்பதற்கே, குருவின் அருள் தேவை.

கிரகங்களின் அருளுக்கு மட்டுமின்றி, இறையருளைப் பெறுவதற்கும் குருவருள் அவசியம். குருவருள் இருந்தால்தான் திருவருள் உண்டு என்றொரு வாசகமே உண்டு.
சுக்கிர பகவானின் அருளைப் பெறுவதும் மிக மிக அவசியம். திருமண யோகத்துக்கும் வீடு மனை உள்ளிட்ட சொத்துகளைப் பெறுவதற்கும் சந்தான பாக்கியம் எனப்படும் குழந்தைச் செல்வம் கிடைப்பதற்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லாமல், கடன் தொல்லை இல்லாமல் வாழ்வதற்கும் சுக்கிரனின் அருளைப் பெறவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சுக்கிர பகவான் யோககாரகன். உலகாயத வாழ்வில், என்னென்ன லெளகீக சந்தோஷங்கள் தேவையோ, அவை அனைத்தையும் நமக்குத் தந்தருளும் வள்ளல் கடவுள்தான் சுக்கிர பகவான்.

சுக்கிர பகவானுக்கு உரிய நாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர வாரத்தில், சுக்கிர பகவானை பிரார்த்திப்பதும் வழிபடுவதும் விசேஷமானது.

வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர காயத்ரி சொல்லி வழிபடுங்கள்.

சுக்கிர பகவான் காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர ப்ரஜோதயாத்

அதாவது, அஸ்வக் கொடியைக் கொண்ட அசுரர்களின் குருவே. எங்களுக்கும் எங்களின் குடும்பத்துக்கும் சுப நிகழ்வுகளைத் தந்தருள்வாய். வெள்ளி எனும் சுக்கிர வேந்தனே. எங்களுக்கு எல்லாக் காலத்திலும் வரங்களைத் தந்து வாழவைப்பாயாக! என்று அர்த்தம்.

இந்த நன்னாளில், சுக்கிர வார வெள்ளிக்கிழமையில், சுக்கிர பகவானை வேண்டிக்கொள்ளுங்கள்.

வீட்டில் விளக்கேற்றி, சுக்கிர காயத்ரி சொல்லி பாராயணம் செய்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். கஷ்டங்களும் துக்கங்களும் காணாமல் போகும். கவலைகள் அனைத்தும் பறந்து போகும். பொன்னும் பொருளும் சேரும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in