ஒரேயொரு முறை ‘சாயிராம்’ சொல்லுங்கள்;  ஏற்றமும் மாற்றமும் தருவார் சாயிபாபா

ஒரேயொரு முறை ‘சாயிராம்’ சொல்லுங்கள்;  ஏற்றமும் மாற்றமும் தருவார் சாயிபாபா
Updated on
1 min read

ஒருநாளில்... ஒருமுறையேனும்... ஒரேயொரு முறையேனும் சாயிபாபா என்று அழைத்துப் பாருங்களேன். உங்கள் வாழ்க்கையில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் தந்து உங்கள் குடும்பத்தைக் காத்தருள்வார் ஷீர்டி நாயகன்.

ஷீர்டி பகவான், அள்ளிக்கொடுக்கும் வள்ளலென அருள் மழை பொழிபவர். சூட்சும நாயகன். சூட்சுமமாக இருந்து நம்மைக் காத்தருள்பவர். நமக்கு வரும் சிறிய துன்பங்களைக் கூட பொறுக்கமுடியாமல், உடனே வந்து நம்மை அரண் போல் இருந்து காப்பவர். ’சாயிராம்’ என்று அழைத்தால் போதும்... இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நம்மையும் நம் குடும்பத்தையும் காபந்து செய்து வாழச் செய்யும் அற்புத மகான்.

பாபா மட்டுமல்ல... அவர் வாழ்ந்து அருள் வழங்கிய, தரிசனம் வழங்கிய ஷீர்டியே சூட்சுமமாக பாபா இன்றைக்கும் இருந்து அருள்பாலிக்கும் தலம்தான். ஷீர்டி மட்டுமா? எங்கெல்லாம் பாபாவுக்கு ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறதோ... பாபா மந்திர் எங்கெல்லாம் இருக்கிறதோ... அங்கெல்லாம் பாபா, சூட்சுமமாக இருந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும் கவலைகளையும் களைந்துகொண்டிருக்கிறார். அருள்வழங்கிக்கொண்டிருக்கிறார். பள்ளத்தில் விழுந்து கிடப்பவரைக் கைதூக்கிவிடுவது போல், வாழ்வில் உயர்த்தி வளம் தந்துகொண்டிருக்கிறார்.

ஷீர்டி ... பகவான் சாய்பாபா சூட்சும ரூபத்தில் இருந்து அருளாசி செய்யும் தெய்வீகத் திருத்தலம். அவர் நடமாடிய புண்ணிய பூமி.அங்கிருந்து மண்ணெடுத்து வந்து, தமிழகம் முழுவதும் பல கோயில்கள் பாபாவுக்கு எழுப்பப்பட்டிருக்கின்றன. அங்கிருந்து சிலைகள் எடுத்துவந்து தமிழகத்தில் பல கோயில்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

சாயிபாபா நடமாடிய ஷீர்டி எனும் புண்ணிய பூமிக்கு நிகரானதாக இந்தத் தலங்களும் ஆலயங்களும் போற்றப்படுகின்றன. உங்கள் இல்லத்தில், பூஜையறையில், சாயிபாபாவின் சிறிய அளவிலான சிலையோ புகைப்படமோ இருந்தால் கூட, அங்கே, அந்த சின்னஞ்சிறிய சிலையில், புகைப்பட்டத்தில் பாபா வந்து உட்கார்ந்துகொள்வார். நம்மை, நாம் செய்யும் நல்லதுகெட்டதுகளையெல்ல்லாம், நமக்கு நடக்கிற நல்லது கெட்டதுகளையெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

நம் கவலைகளை, துக்கங்களை, அவமானங்களை, தோல்விகளை முழுவதுமாக துடைத்தெறிந்து, நமக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கெளரவத்தையும் வெற்றியையும் தந்தருள்வார். ஒருநாளில்... ஒருமுறையாவது ‘சாயிராம்’ என்று சொல்லுங்கள். மனமொன்றி, பாபாவை கூப்பிடுங்கள். உங்கள் வாழ்வில், இதுவரை இல்லாத ஏற்றங்களையும் மாற்றங்களையும் தந்தருள்வார்.

‘சாயிராம்’ என்று ஒருமுறை அழைத்துப் பாருங்களேன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in