

சென்னை - வேலூர் சாலையில், காவேரிப்பாக்கத்துக்கு அருகில் உள்ள திருப்பாற்கடல் பெருமாளை நினைத்து, அத்திப்பழ தானம் வழங்கினால், இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும். தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம்.
வைஷ்ணவ திருத்தலங்களுக்குச் சென்று வேங்கடவனை, மகாவிஷ்ணுவை, பெருமாளை தரிசனம் செய்யவேண்டும் என்று புண்டரீக மகரிஷி யாத்திரையாகக் கிளம்பினார். வழியெங்கும் உள்ள பெருமாள் கோயில்களைத் தரிசித்துக்கொண்டே வந்தார். நாட்கள், வாரங்களாகின. வாரங்கள் மாதங்களாகின. வருடங்களாகவும் கடந்தன. அப்படி வந்து கொண்டிருந்த போது, அந்த கிராமத்துக்குச் சென்றார். அங்கே ஆலயம் இருந்தது. உள்ளே சென்று பார்த்தவர் அதிர்ந்து போனார். அது... சிவாலயம்.
சிவலிங்கத்தைக் கண்டுதான் ஆச்சரிய அதிர்ச்சி. அடடா... பெருமாள் கோயிலென்று நினைத்து, சிவன் கோயிலுக்கு வந்துவிட்டோமே’ என்று கிளம்பினார்.
அப்போது, அவருக்கு எதிரே முதியவர் ஒருவர் வந்தார். அந்த முதியவரிடம் ‘இங்கே பெருமாள் கோயில் இருக்கிறதா?’ என்று கேட்டார். ‘நீங்கள் இப்போது வந்தீர்களே... இதுதான் பெருமாள் கோயில்’ என்றார் முதியவர். ‘என்ன பெரியவரே குழப்புகிறீர்கள்? இது சிவன் கோயிலாயிற்றே’ என்றார்.
‘வாருங்கள், கோயிலுக்குச் சென்று காட்டுகிறேன், இது பெருமாள் கோயில்தான்’’ என்ற முதியவர் விறுவிறுவென கோயிலை நோக்கி நடந்தார். மகரிஷியும் பின் தொடர்ந்தார்.
கருவறைக்குள் நுழைந்த முதியவர், ஆவுடையாரின் மீது நின்றார். பெருமாளாகவே திருக்காட்சி தந்தார். ’வந்தது சிவபெருமானா? ஆஹா’ என்று மெய்சிலிர்த்தவர், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். ‘சிவம் வேறு விஷ்ணு வேறு இல்லை’ என உணர்த்தினார். ‘ஹரியும் சிவனும் ஒன்று’ எனும் தத்துவத்தை விளக்கிய அந்தத் திருத்தலத்தில், மகாவிஷ்ணு, திருப்பாற்கடலில் உள்ளது போலவே, மூன்று திருக்கோலங்களிலும் திருக்காட்சி தந்தருளினார்.
புண்டரீக மகரிஷிக்காக, பெருமாள் பிரசன்னமானார். அதனால் பிரசன்ன வேங்கடேச பெருமாள் எனும் திருநாமம் கொண்டார். அந்தத் தலம் ‘திருப்பாற்கடல்’ என்றே இன்றைக்கும் அழைக்கப்படுகிறது.
திருப்பாற்கடல் எனும் அழகிய கிராமத்தில், அருகருகே அமைந்துள்ளது சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும். இங்கே பெருமாளின் திருநாமம் - ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீஅலர்மேலு மங்கை தாயார்.
புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம் இது. வைகானச முறைப்படி பூஜைகள் நடைபெறும் ஆலயம். நாராயண சதுர்வேதி மங்கலம் என்று இந்த ஊரைக் குறிப்பிடுகிறது புராணம். சிறிய ஆலயம்தான். ஆனால் கீர்த்தி மிக்க திருத்தலம். இந்தத் தலத்தின் முக்கியமான விசேஷம்.... இந்தத் தலத்தின் விருட்சம் வில்வமும் துளசியும். சிவனாருக்கு உகந்த வில்வமும் பெருமாளுக்கு உகந்த துளசியும் விருட்சமாகக் கொண்ட திருத்தலம் இது.
சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழியில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து கிளையெனப் பிரிந்து செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் பயணித்தால், திருப்பாற்கடல் திருத்தலத்தை அடையலாம்.
பிரசன்ன வேங்கடேச பெருமாள், ரங்கநாத பெருமாள் எனும் திருநாமங்களுடன் சேவை சாதிக்கிறார் பெருமாள். அதேபோல், தாயாருக்கு கடல்மகள் நாச்சியார் எனும் திருநாமமும் உண்டு.
திருப்பாற்கடல் பிரசன்ன வேங்கடெசபெருமாளை மனதாரப் பிரார்த்தித்து அத்திப்பழங்களை தானமாக வழங்கினால், தீராத நோயெல்லாம் தீரும். இல்லத்தில் ஐஸ்வரியம் குடிகொள்ளும். மகாலக்ஷ்மி தாயாரின் பரிபூரண அருளைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.