

செவ்வாய் பகவானின் அருள் இருந்துவிட்டால், செவ்வாய் தோஷம் முதலானவை நீங்கிவிடும். வாழ்க்கையில் ஏற்றமும் நல்ல நல்ல மாற்றமும் கிடைக்கப் பெறலாம். கடன் தொல்லையில் இருந்தும் பிரச்சினைகளில் இருந்தும் மீள்வது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அங்காரகன் பற்றிய தகவல்கள்:
நிறம் : சிவப்பு
வாகனம் : ஆடு
தானியம் : துவரை
மலர் : செவ்வரளி, செண்பகம்
ஆடை : செந்நிற ஆடை
நவரத்தினம் : பவழம்
நைவேத்தியம் : துவரம்பருப்பு பொடி கலந்த சாதம்
உலோகம் : செம்பு
சமித்து : கருங்காலி, நாயுருவி
நட்சத்திரம் : அவிட்டம், சித்திரை, மிருகசீரிடம்
திசை : தெற்கு
கிழமை : செவ்வாய்க்கிழமை
குலம் : க்ஷத்திரிய குலம்
கோத்திரம் : பரத்வாஜ கோத்திரம்
பகைவர்களை எதிர்க்கும் சக்தி, வீரம், சகோதர்களிடையே இணக்கம், பிரிவு, வீடு நிலம் முதலானவற்றுடன் வாழ்வது, சண்டையில், வாக்குவாதத்தில் வெற்றி பெறுவது, தீவிபத்து மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள், கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பது, அதிகாரப் பதவிகளை வகிப்பது முதலான நன்மை தீமைகள் உள்ளிட்டவற்றிற்கு, செவ்வாய் பகவானே காரணம் என விவரிக்கிறார்கள் ஜோதிட அறிஞர்கள்.
எனவே, செவ்வாய்க்கிழமைகளில், அங்காரக வழிபாடு, அதாவது செவ்வாய் பகவான் வழிபாடு, அதாவது முருகப் பெருமான் வழிபாடு மிக மிக அவசியம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மறக்காமல் வழிபடுங்கள். முடியும்போது, வைத்தீஸ்வரன் கோவில் திருத்தலத்துக்குச் சென்று அங்காரக வழிபாடு செய்யுங்கள். கண்ணார தரிசித்து மனதாரத் தரிசித்து வாருங்கள்.
இதனால், வாழ்வில் ஏற்றங்களையும் நல்ல நல்ல மாற்றங்களையும் பெறுவது உறுதி.
செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய்க்கு உரிய முருகக் கடவுளை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டுங்கள். வாழ்வில் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் முருகக் கடவுள். செவ்வாய் பலம் பெற்று, செம்மையாய் வாழ்வீர்கள்.