Last Updated : 24 Aug, 2020 03:35 PM

 

Published : 24 Aug 2020 03:35 PM
Last Updated : 24 Aug 2020 03:35 PM

’பாபாவிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து விடுங்கள்’

ஷீர்டி சாயிபாபாவை நினைத்துக் கொள்ளுங்கள். அவரை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையின் மேடு பள்ளங்களையும் கஷ்டங்களையும் சாயிபாபா பார்த்துக்கொள்வார்.

மகான் என்பவர் குருவின் அம்சம். குரு என்பவர் ஞானி. ஞானி என்பவர், நம்மைக் கடைத்தேற்றி. அருள் வழங்குபவர். அப்படி அருள் வழங்குபவர்கள், நமக்கும் நம் குடும்பத்துக்கும் ஆசி வழங்கி, வழிக்குத் துணையாக இருப்பவர்கள் மகான் என்றும் தெய்வத்துக்கு நிகரானவர் என்றும் வணங்குகிறோம். கொண்டாடுகிறோம். ஆராதித்து அகம் மகிழ்கிறோம். ஷீர்டி சாயிபாபா, ஒரு ஞானியாக, குருவாக, ஞான குருவாக, மகானாக... பேசும் தெய்வமாக இருந்து இன்றைக்கும் நமக்கு அருளிக்கொண்டிருக்கிறார்.
’என்னுடைய அன்புக்கு உரிய குழந்தைகளே. இந்த வாழ்க்கை அற்பமானது என்று எண்ணிவிடாதீர்கள். மிக மிக அரிதானது இந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கைப் பயணத்தை நாம் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவேண்டும். அந்தப் பயணத்துக்கு நீங்க்ள் தேர்ந்தெடுக்கும் பாதையானது, உண்மையில் நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல.

உங்கள் வாழ்க்கையும் உங்களுக்கான பாதையும் அந்த வாழ்க்கைப் பயணத்துக்கான செயல்களும் நீங்கள் தேர்ந்தெடுத்தது அல்ல. நீங்கள் செயலாற்றுவது அல்ல. இவை அனைத்துமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது.

அப்படி தீர்மானிக்கப்பட்ட வழியில்தான் நீங்கள் நடந்துகொண்டிருக்கிறீர்கள். உங்களின் வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டது என்பதைப் புரிந்து உணர்ந்துகொண்டால், உங்கள் வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதில் உங்களுக்குத் தெளிவு கிடைத்துவிடும்.

என் அன்புக் குழந்தைகளே! இதில் உங்களுக்குத் தெளிவு வந்துவிட்டால், உங்களுடைய வாழ்க்கை உன்னதமானது என்பதையும் புரிந்துகொள்வீர்கள். ஆனால் பலரும் புரிந்து கொள்வதே இல்லை. சக்தியின் உன்னதங்களைத் தெரிந்துகொள்வதே இல்லை.
ஏற்கெனவே திட்டமிடப்பட்ட உங்களின் வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் ஏற்படலாம். நிறை குறைகள் ஏற்படலாம். கஷ்ட நஷ்டங்கள் இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால், ‘இந்த உலகம் யுத்தகளம் போல் இருக்கிறது’ என்று நீங்கள் நினைக்கலாம் .’நம் வாழ்க்கையே யுத்தமாகியிருக்கிறது’ என்று வேதனைப்படலாம்.

கவலையே படாதீர்கள். உங்களையும் உங்களின் வாழ்க்கையையும் என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படுகிற எல்லாக் கவலைகளையும் நான் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் பயணத்தை நான் இலகுவாக்கித் தருகிறேன்’’ என்கிறார் சாயிபாபா.

‘’உன்னுடைய தகப்பனாக நானிருக்கிறேன். எதற்கும் துக்கப்படாதே. எதைக் கண்டும் பயப்படாதே. என் திருநாமத்தை யாரெல்லாம் சொல்கிறீர்களோ... அங்கே அவர்களுக்கு அருகில் நான் வந்துவிடுவேன்’’ என்பது சாயிபாபா வாக்கு.

உங்கள் அனைவரையும் ஒரு அம்மாவாக, அப்பாவாக இருந்து காப்பேன்.என் இதயத்தைக் கருவறையாக்கி அதில் உங்களை வைத்து அரவணைப்பேன்’’ எனும் சாயிபாபாவின் சத்திய வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள். ‘சாயிராம்’ என்று அவரின் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே இருங்கள்.

பகவான் சாயிபாபா உங்களைக் காப்பார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x