

ஆவணி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் சதுர்த்தி சுக்லபட்ச சதுர்த்தி எனப்படும். இந்தநாளே விநாயக சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்தநாளில்தான் விநாயகப் பெருமான் அவதரித்தார் என்கிறது புராணம்.
பெரும்பான்மையானவர்களின் இஷ்ட தெய்வம் பிள்ளையார்தான். எளிமையானவர் மட்டுமல்ல... இவரை வழிபடுவதும் கூட மிக மிக எளிமையானதுதான்.
நாளை 22.8.2020 விநாயக சதுர்த்தி. இந்த நாளில், மண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வாங்கி, பூஜிப்பது வழக்கம். விநாயகருக்கு ஒரு மேடை. மேலே ஒரு குடை. அருகம்புல் மாலை. வெள்ளெருக்கு மாலை என அலங்கரித்தாலே, நம் வீட்டுக்கு வந்து உட்கார்ந்துகொள்வார் ஆனைமுகன்.
நாளைய தினம், பிள்ளையாருக்கு பூஜை செய்ய உகந்த நேரம்:
காலை 6. மணி முதல் 7. 50 மணி வரை.
காலை 10.35 முதல் 11.45 மணி வரை.
இதில், காலை 6 மணி முதல் 7.50 மணி வரையிலான நேரத்தில், வாஸ்து நேரமும் இணைந்து வருகிறது (வாஸ்து நேரம் 7.23 முதல் 7.59 மணி வரை). எனவே இந்த நேரத்தில், பூஜைகள் செய்வது நூறு மடங்கு பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதைவிடுத்து, 9 மணி முதல் 10.30 மணி வரை ராகுகாலம். எனவே காலை 10.35 முதல் 11.45 மணி வரையிலான நேரத்தில், விநாயகருக்கு பூஜைகள் செய்யலாம் என்று தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
கவலைகளெல்லாம் காணாமல் போக, கணபதி பெருமானை வணங்குவோம்.