Last Updated : 21 Aug, 2020 09:44 PM

 

Published : 21 Aug 2020 09:44 PM
Last Updated : 21 Aug 2020 09:44 PM

 கொழு கொழு பிள்ளையாருக்கு கொழுக்கட்டை; கொழுக்கட்டை செய்வது இப்படித்தான்! - விநாயக சதுர்த்தி ஸ்பெஷல்

விநாயக சதுர்த்தி நாளில், பிள்ளையாருக்குப் பிடித்த கொழுக்கட்டைகளை தயார் செய்து, நைவேத்தியமாகப் படைத்து வேண்டுவோம்.

கொழுக்கட்டை செய்வது இப்படித்தான்.

இனிப்பு பூரணக் கொழுக்கட்டை

தேங்காய் துருவல் - 1 கப்

வெல்லம் - முக்கால் கப்

ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்

அரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

நெய் - போதுமான அளவு

செய்முறை :

கடாய் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அரை கப் அளவுக்கு தண்ணீர் விடுங்கள். அடுப்பிலேற்றி சூடானதும் இதில் வெல்லத்தை இடுங்கள். நன்றாக கரையவேண்டும். பின்னர், வடிகட்டிக் கொள்ளவேண்டும்.

பின்னர், அதை அடுப்பில் வைத்து, ஏலக்காய்ப் பொடி மற்றும் தேங்காய் துருவல் முதலானவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். எல்லாமும் ஒன்று சேர்ந்து வரும் வேளையில், இறக்கிவைத்துவிடுங்கள். சிறிது நேரம் ஆறவேண்டும்.

அதன் பிறகு உருண்டை செய்துகொள்ளுங்கள். இப்போது அரிசி மாவைக் கிளறி சொப்பு போல் செய்துகொண்டு அதனுள் தேங்காய் பூரணத்தை வைத்து, மூடிவிட்டு, ஆவியில் நன்றாக வேகவைக்கவும்.

சிறிது நேரத்தில், பிரமாதமான, பிள்ளையாருக்குப் பிடித்த தேங்காய் பூரணக் கொழுக்கட்டை தயார்.


காரக் கொழுக்கட்டை செய்வது இப்படித்தான்!

தேவையான பொருட்கள் :

உளுந்தம் பருப்பு - ஒரு கப்

பச்சை மிளகாய் - 3

சிவப்பு மிளகாய் - மூன்று அல்லது நான்கு

பெருங்காயம் - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு : ஓரளவு

இஞ்சி - பொடிப்பொடியாக நறுக்கியது

செய்முறை :

உளுந்தம் பருப்பை முதலில் நன்றாகக் கழுவிக் கொள்ளவேண்டும். நாற்பது அல்லது நாற்பத்து ஐந்து நிமிடங்கள் ஊறவையுங்கள். பின்னர் அந்த உளுந்தை பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயம் முதலானவற்றைப் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த மாவை, இட்லி தட்டில் வைத்து நன்றாக ஆவியில் வேகவைத்துவிடவேண்டும். ஆவி வந்ததும், வேக வைத்ததை எடுத்து சிறிது நேரம் ஆறவைக்கவும். பிறகு மிக்ஸியில் மிதமாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர், பூவைப் போல உதிரி உதிரியாக வரும்.

இதையடுத்து, வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை முதலானவற்றை தாளிக்கவேண்டும். உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை நன்றாகக் கிளறவேண்டும்.

பின்னர், கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொண்டு, அதை கொஞ்சம் நீளமாகவோ அல்லது உருண்டையாகவோ செய்துகொண்டு, அதற்குள் கார பூரணத்தை வைத்து, வேகவைத்துவிடுங்கள். ஆவி வந்ததும் அருமையான காரக் கொழுக்கட்டை ரெடி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x