

ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று (சுக்ல பட்ச சதுர்த்தி) கொண்டாடப்படுகிறது. நாளைய தினம் 22.8.2020 விநாயக சதுர்த்தி.
ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கான பிரசாதங்கள், சத்தானவை. அந்தப் பிரசாதத்தை உட்கொண்டால், நம் உடலில் தெம்பு பிறக்கும். உடல் பலத்துடனும் வழிபாட்டின் மூலமாக, மனோபலத்துடனும் திகழலாம்!
அந்த உணவு வகைகள் குறித்து அருணகிரிநாதர் பட்டியலிட்டுத் தந்திருக்கிறார்.
இதில் அவரைக்காய் மட்டும் அடங்காது. பொதுவாய்த் தமிழில் அவரை என்றால் உள்ளே விதை உள்ள எல்லா விதமான பீன்ஸ் வகைக் காய்களும் அடங்கும். அவரை, கரும்பு, கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, தேன், அப்பம், அதிரசம், வடை, பட்சணம் எல்லாவற்றிற்கும் மேலாக மோதகம் எனப்படும் கொழுக்கட்டை!
விநாயக சதுர்த்தி நன்னாளில், நம்மால் என்ன பிரசாதங்களையெல்லாம் படைத்து, ஸ்ரீவிநாயகரை வணங்க முடிகிறதோ... வணங்கி வழிபடுவோம். ஒவ்வொரு பிரசாதமும் ஒவ்வொரு விதமான நற்பலன்களை வாரி வழங்கவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
வீடுதோறும் களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வாங்கி, அதில் வண்ணக் குடையை இணைத்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது மும்மடங்கு பலன்களைத் தந்தருளும். பிள்ளையாருக்குப் பிடித்த கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நைவேத்தியங்கள் படைத்து வழிபடுவது மகத்தான பலன்களைத் தரும்.
வாழைப்பழம், திராட்சை, நாவல்பழம், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடனும் பக்தியுடனும் கணபதி பெருமானுக்கு வழங்கி வேண்டுவோம். அறிவு, தெளிந்த ஞானம், புத்திக்கூர்மை, ஞாபகசக்தி, காரியத்தில் வெற்றி முதலானவற்றைத் தந்தருள்வார் ஸ்ரீவிநாயகப் பெருமான்!
தடைகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கிடுவார் ஆனைமுகத்தான். ஆற்றலையும் ஞானத்தையும் தந்து அருளுவார்.