

இருப்பதிலேயே எளிமையான வழிபாடு என்பது, பிள்ளையாரை வழிபடுவதுதான். அவர் மட்டும் என்னவாம்... முழு முதற்கடவுளான பிள்ளையாரும் எளிமையானவர்தான்.
பொதுவாகவே, கல்லைக்கொண்டோ, மண்ணைக் கொண்டோ, மரத்தைக் கொண்டோ, செம்பைக் கொண்டோ தெய்வத் திருமேனிகளைச் செய்து வழிபட வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள். இதிலும் பிள்ளையார் வித்தியாசமானவர். மண்ணைக் கொண்டு செய்யலாம். பசுஞ்சாணம் கொண்டு செய்யலாம். மஞ்சள் பிடித்தே பிள்ளையாரை வழிபடலாம். கருங்கல் கொண்டோ பளிங்கு கொண்டோ செய்யலாம். தங்கம், வெள்ளி முதலானவை கொண்டும் செய்யலாம். அவ்வளவு ஏன்... வெள்ளெருக்கு வேர் கொண்டும் பிள்ளையாரை செய்து வழிபடலாம். பசுவின் மூலம் கிடைக்கும் வெண்ணெயைக் கொண்டும், சந்தனத்தைக் கொண்டும் வெல்லத்தை இடித்தும் கூட பிள்ளையார் செய்து வழிபட்டதைப் புராணங்கள் விவரிக்கின்றன.
‘’எல்லாக் கிழமைகளிலும் பிள்ளையாரை வழிபடலாம். ஒருவேளை அப்படி வழிபட மறந்துவிட்டால், வெள்ளிக்கிழமையில் மறக்காமல் வழிபடுங்கள். அதேபோல் சதுர்த்தி திதியில் அவசியம் வழிபடுங்கள். விநாயகப் பெருமானை நினைத்து வணங்கும்போது அவ்வையாரையும் நினைத்துக்கொள்ளுங்கள். அவ்வையார் நமக்கு அருளிய விநாயகர் அகவல் பாடலை, மாதந்தோறும் வருகிற சதுர்த்தியின் போது, சங்கடஹர சதுர்த்தியின் போது, விநாயக சதுர்த்தியின் போது பாராயணம் செய்து வழிபடுங்கள். இந்த அகவலைப் பாடி, பிள்ளையாரை வேண்டினால், இரட்டிப்புப் பலன்களை உங்களுக்குத் தருவார் பிள்ளையார்.
விநாயகர் அகவல் பாராயணம் செய்வது உங்களுக்கு நன்மைகளைத் தரும். உங்கள் குடும்பத்துக்கு மேன்மைகள் பலவற்றைத் தரும். அதுமட்டுமா? நம் தேசத்துக்கு பல விதமான நன்மைகளை வழங்கவல்லது இது. சொல்லப்போனால், ஒவ்வொருவரும் விநாயகர் அகவல் பாராயணம் செய்தால், மொத்த உலகுக்கும் க்ஷேமம் நிச்சயம் உண்டு.
ஆகவே, பிள்ளையார் நமக்கு அருளுவதற்கு அவ்வையாரின் துணை அவசியம். அவருடைய விநாயகர் அகவல் மிக மிக அவசியம். விநாயகர் அகவல் படித்து, விநாயகப் பெருமானை வழிபடுங்கள். உலக க்ஷேமத்துக்காக வழிபடுங்கள்’’ என காஞ்சி மகா பெரியவா அருளியுள்ளார்.
விநாயக சதுர்த்தி நாளில், கொழுக்கட்டை, கரும்பு, அவலும் பொரியுமாக படைத்து வழிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
கொழுக்கட்டை எதற்காக? கொழுக்கட்டையின் மேல்பகுதி வெள்ளையாக இருக்கும். உள்ளே பூரணம் எனும் இனிப்பு இருக்கும். மனத்தில் தூயபக்தியுடன் இருந்தால், கண்ணுக்குத் தெரியாமல் உள்ளே இருக்கிற இறைவனை அடையலாம் எனும் தத்துவத்தைச் சொல்கிறது கொழுக்கட்டை.
அவல், பொரியும் அப்படித்தான். அவலையும் பொரியையும் உள்ளங்கையில் வைத்து ஊதிப்பாருங்கள். அப்படியே காற்றில் பறந்துவிடும். நம்முடைய துன்பங்களையும் கஷ்டங்களையும் பிள்ளையார் வழிபாட்டால், தூர எறிந்துவிடுகிறார் என்பதைக் குறிக்கவே அவலும் பொரியும் நைவேத்தியம் படையலிடப்படுகிறது, பிள்ளையாருக்கு!
விநாயக சதுர்த்தி நன்னாளில், நைவேத்தியப் பொருட்களில், கரும்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கரும்பு பார்ப்பதற்கும் கடிப்பதற்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனால் கரும்பின் சாறு அப்படியொரு இனிப்பான ருசியைக் கொண்டது. வாழ்க்கையில், துன்பத்திலும் துயரத்திலும் உழல்பவர்களுக்கு இனிமையான வாழ்க்கையை, எதிர்காலத்தை இறைவன் தந்தருள்வான் எனும் உயரிய தத்துவத்தைப் போதிக்கிறது கரும்பு.
நாளை 22.8.2020 விநாயக சதுர்த்தி. இந்த நன்னாளில், விநாயகருக்கு கரும்பு, அவல், பொரி, கொழுக்கட்டைகள் முதலான நைவேத்தியங்கள் படைத்து, விநாயகர் அகவல் பாராயணம் செய்து வழிபடுங்கள். நாமும் நன்றாக இருப்போம். நம் வீடும் நலமாக இருக்கும். நம் நாடும் இந்த உலகமும் எல்லாமும் பெற்று வளமுடன் இருக்கும்!