

விநாயகர் அவதாரம் நிகழ்ந்த தினமே தரித்த தினம்... விநாயக சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது.
ஒருமுறை பார்வதிதேவி நீராடச் செல்லும்போது, தனக்குத் துணையாக, காவலாக, சந்தனத்தைக் குழைத்து ஒரு உருவத்தை உண்டுபண்ணினார் (மண்ணை எடுத்து உருவம் அமைத்ததாகவும் புராணம் சொல்கிறது). அந்த உருவமே, உமையவளின் அருளால் உயிர் பெற்றது. அதுவே, பிள்ளையார் என்றானதாக விவரிக்கிறது புராணம்.
அப்படி பிள்ளையார் இருக்க, அங்கே வந்தார் சிவபெருமான். அவரையும் அப்போது உள்ளே விடவில்லை. உடனே கோபம் கொண்ட சிவனார், பிள்ளையாரின் சிரத்தை அறுத்து வீசினார். குளித்துவிட்டு வந்த பார்வதிதேவி, சிரம் துண்டிக்கப்பட்ட பிள்ளையாரைக் கண்டார். ஆவேசமானார்.
கடும் உக்கிரத்துடன் காளி உருவெடுத்தார். மூவுலகிலும் புகுந்து, கண்ணில் தென்படும் உயிர்களை, தாவரங்களை, மரங்களை அழித்தார். காளியின் நர்த்தனம் கண்டு தேவர்களும் முனிவர்களும் கிடுகிடுத்துப் போனார்கள். அவளின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
தேவர்கள், பரமேஸ்வரனிடம் சென்று முறையிட்டார்கள். ‘எங்களைக் காத்தருளுங்கள்’ என்று வேண்டினார்கள். இதையடுத்து, சிவகணங்களை ஏவிவிட்டார். அந்த சிவகணங்கள் சென்ற பாதையில், மதங்கொண்டது போல் யானை வந்தது. அந்த யானையைக் கொன்றனர்.
அதைக் கண்ட சிவனார், பிள்ளையாரின் உடலில் யானையின் தலையைப் பொருத்தினார். இதை தன் ஞான திருஷ்டியால் அறிந்து உணர்ந்த உமையவள், சாந்தமானார். கோபம் தணிந்தது. இதனால், பிள்ளையாருக்கு கணபதி என்று திருநாமம் அமைந்தது. கணங்களையெல்லாம் காப்பவர், கணங்களுக்குத் தலைவன், கணங்களைக் கொண்டு ஆள்பவன் என்று அர்த்தம்.
மேலும், எந்தவொரு சிவபூஜையோ, வேறு பூஜைகளோ... யார் செய்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகே மற்ற எல்லா தெய்வங்களை வழிபட வேண்டும் என்றானதாக விவரிக்கிறது புராணம்.
ஆவணி மாத சுக்கில பட்ச சதுர்த்தி நாளில், விநாயகர் அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். இதுவே விநாயக சதுர்த்தி என்று கொண்டாடப்படுகிறது.
நாளைய தினம் 22.8.2020 சனிக்கிழமை, விநாயக சதுர்த்தி. இந்த அற்புதமான நாளில், பிள்ளையாரை வணங்கும். பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் .விநாயகப்பெருமானுக்கு பூஜைகள் செய்து, பிரார்த்திப்போம்.
பிள்ளையார் இருக்க பயமேன்!