Published : 17 Aug 2020 20:06 pm

Updated : 17 Aug 2020 20:06 pm

 

Published : 17 Aug 2020 08:06 PM
Last Updated : 17 Aug 2020 08:06 PM

வீடு மனை யோகம் தருவான் பூமிகாரகன்; அசுரமயிலுடன் அருள்புரியும் திருப்பட்டூர் முருகன்! 

tirupattur-murugan

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். குன்றிருக்கும் இடம் என்றில்லை. எல்லா ஊர்களிலும் குமரன் குடிகொண்டு, குடிமக்களை குறைவின்றி காத்துவருகிறான்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு தனி சக்தியும் சாந்நித்தியமும் உண்டு. அதேபோல், சென்னை காளிகாம்பாள் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் முருகப்பெருமானை வரப்பிரசாதி என்கின்றனர் முருகப்பெருமானின் பக்தர்கள்.


சிவாலயங்களில் இருக்கும் முருகன், முக்கியத்துவம் வாய்ந்தவராக போற்றி வணங்கப்படும் ஆலயங்கள் ஏராளம். அதில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலும் உண்டு.

கர்வத்துடன் இருந்த பிரம்மாவின் சிரசில் ஒன்றைக் கொய்தார் சிவனார் என்பதுதான் நமக்குத் தெரியுமே. மேலும் படைப்பு வேலையையும் இழந்தார் பிரம்மா. இதனால் தேஜஸ் இழந்தார். பதவி இழந்தார். கலங்கித் தவித்த பிரம்மா, சிவபெருமானிடம் , ‘என்னை மன்னித்து அருளுங்கள். சாப விமோசனம் கொடுங்கள்’ என்று கேட்டார். துவாதச லிங்கங்கள் அமைத்து வழிபடு. பார்க்கலாம் என்றார் சிவனார்.

துவாதச என்றால் 12. எனவே பனிரெண்டு தலங்களில் உள்ள சிவலிங்கத்தை, மகிழம்பூ வனமாக இருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அங்கே, தீர்த்தத்தை உருவாக்கினார். அனுதினமும் பூஜைகள் செய்துவந்தார். இந்தத் தீர்த்தம்... பிரம்ம தீர்த்தம் என்று இன்றைக்கும் அழைக்கப்படுகிறது. இதில் மகிழ்ந்த சிவனார், ’இங்கு வரும் என் பக்தர்களுக்கு விதி இருப்பின் விதியைக் கூட்டி அருள்வாயாக. விதியை நல்லவிதமாக மாற்றி அருள்வாய்’ என்று ஆணையிட்டார். அதன்படி, இங்கு வரும் பக்தர்களின் தலையெழுத்தையே திருத்தி அருள்கிறார் பிரம்மா.

தனிச்சந்நிதியில் பிரம்மா குடிகொண்டிருக்கும் கோயில், வாழ்வில் திருப்பங்கள் தரும் திருத்தலம், தலையெழுத்தையே திருத்தி அருளும் திருத்தலம் என்று திருப்பட்டூர் போற்றப்படுகிறது. திருப்பட்டூருக்கு திருப்பிடவூர் என்றும் திருப்படையூர் என்றும் பெயர்கள் இருந்திருக்கின்றன. காலப்போக்கில், திருப்பட்டூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

ஆமாம்... புராண காலத்தில், திருப்பிடவூர், திருப்படையூர் என்று பெயர் அமைந்ததற்குக் காரணகர்த்தா... படைகள் திரட்டி, சூரனை சம்ஹாரம் செய்த முருகப்பெருமானே அதற்குக் காரணம்.

ஆமாம்... முருகப்பெருமான், படைகளை திரட்டிக் கொண்டு செல்லும் போது, வழியில் தங்கியிருந்த தலங்களை பிடவூர் என்றும் படையூர் என்றும் அழைக்கப்பட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். அப்படி தன் படையினருடன் முருகப்பெருமான் இங்கே தங்கியிருந்தார் எனும் பெருமையும் வலிமையும் கொண்டு திகழ்கிறது திருப்பட்டூர் எனும் புண்ணியபூமி.

வேல் கொண்டு நம் வினைகளைத் தீர்க்கும் வேலவன், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராக, சுப்ரமண்யராக அழகு ததும்பக் காட்சி தருகிறார். அவரின் சந்நிதியில் வள்ளிதெய்வானையுடன் நிற்கிற அழகையும் அந்தக் கல்சிற்பத்தில் தெரிகிற திரும்பிப் பார்க்கிற மயிலின் ஒயிலையும் கண்டு சிலிர்த்துவிடுவீர்கள் என்று விவரிக்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள்.

அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் அல்லவா அவன். பிரணவ மந்திரத்தின் பொருளை எடுத்துரைத்த மந்திரமூர்த்தி அல்லவா! எனவே இங்கே குரு ஸ்தானத்தில், குரு அந்தஸ்தில், முருகப்பெருமான் கோலோச்சுகிறார்.

குரு பிரம்மாவுக்கு பின்னே உள்ள சந்நிதியில் குருவாகவும், ஞானகுருவாகவும் படை வீரனாகவும் இருந்து நம் எதிரிகளையெல்லாம் பந்தாடித் தள்ளுகிறார்.

முருகக் கடவுளின் வலது திருக்கரத்தின் கீழே மயிலின் திருமுகம் அமைந்திருக்கிற சிலையைத்தான் பல கோயில்களிலும் தரிசிக்கலாம். இதை தேவ மயில் என்பார்கள். இங்கு, கந்தபிரானின் இடது கரத்தின் கீழே, மயிலின் திருமுகம் அமைந்திருப்பது வேறெங்கும் காணக் கிடைக்காத ஒன்று என்கிறார்கள். இதை, அசுர மயில் என்கின்றன ஞானநூல்கள்.

சுப்ரமண்ய பெருமான், ஞானகுரு. பூமிகாரகன். செவ்வாய்க்கு அதிதேவதையும் முருகக் கடவுளே! இந்தத் தலத்து முருகப் பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, கந்தனுக்கு உரிய செவ்வாய்க்கிழமையில் அல்லது சஷ்டி நாளில் அல்லது எப்போது, எந்த நாளில் வந்து வழிபட்டாலும், எதிரிகள் தொல்லை ஒழியும். எடுத்த காரியம் தங்குதடையின்றி நடந்தேறும். திருப்பட்டூர் முருகப் பெருமானை நினைத்து, மஞ்சள் துணியில் 11 ரூபாய் முடிந்து வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். வாரிசு இல்லை எனும் ஏக்கம் நீங்கி, பிள்ளைச் செல்வம் கிடைக்கப் பெறலாம். கோர்ட், கேஸ் என வழக்கில் சிக்கி வாழ்க்கையில் தவிப்பவர்களுக்கு வழக்கில் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

செவ்வாய்க்கிழமை மற்றும் மாதந்தோறும் வருகிற சஷ்டி அல்லது கிருத்திகை நட்சத்திர நாளில், முருகக்கடவுளை வணங்குங்கள். வஸ்திரம் சார்த்தி, அரளிப்பூமாலை அணிவிக்கிறேன் என்று வேண்டுங்கள். செவ்வாய் முதலான சகல தோஷங்களும் விலகும். சந்தோஷம் வீட்டில் எப்போது குடிகொண்டிருக்கும் என்பது சத்தியம் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

புதிதாக தொழில் துவங்குபவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் என்று கலங்கித்தவிப்பவர்கள், வளர்பிறையில் வரும் சஷ்டி அல்லது கிருத்திகை நாளில் வந்து, வஸ்திரம் சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வியாபாரம் செழித்து வளரும்.

அதேபோல், சொந்த வீடு எனும் கனவும் லட்சியமும் ஆசையும் விருப்பமும் இல்லாதவர்கள் உண்டா என்ன? செவ்வாய், சஷ்டி, கிருத்திகை அல்லது அவர்களின் நட்சத்திர நாளில் இங்கு வந்து முருகப்பெருமானுக்கும் வள்ளி தெய்வானைக்கும் வேஷ்டி & புடவை சார்த்தி, வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, மனதார வழிபடுங்கள். நீங்கள் வாங்கிய இடத்தில் ஏதேனும் சிக்கல் இருப்பின், அவை விலகிவிடும். நிலம் தொடர்பான வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ‘இடமும் இல்லை, மனையும் கிடையாது’ என்பவர்கள், இடமோ வீடோ வாங்குகிற யோகம் விரைவிலேயே வாய்க்கும் என்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள். .

அசுரமயிலுடன் தரிசனம் தரும் முருகக் கடவுளை வணங்குங்கள். அல்லல்கள் அனைத்தையும் போக்குவான். எதிர்ப்புகள் அனைத்தையும் நீக்குவான்!

திருப்பம் தரும் திருப்பட்டூருக்கு வருவதாக வேண்டிக்கொள்ளுங்கள். தலையெழுத்தையே திருத்தி அருளும் பிரம்மாவை தரிசித்துவிட்டு, அப்படியே நல்ல நல்ல திருப்பம் தரும் முருகக் கடவுளையும் வணங்குங்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.தவறவிடாதீர்!

வீடு மனை யோகம் தருவான் பூமிகாரகன்; அசுரமயிலுடன் அருள்புரியும் திருப்பட்டூர் முருகன்!திருப்பட்டூர்திருப்பட்டூர் பிரம்மாதிருப்பட்டூர் முருகன்அசுர மயில்தேவ மயில்முருகக் கடவுள்பூமிகாரகன்செவ்வாய்செவ்வாய்க்கு அதிதேவதைMuruganTirupatturTirupattur brammaBramma

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author