

ஆவணிச் செவ்வாயில், கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகக் கடவுளைப் பாராயணம் செய்யுங்கள். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அருளுவார் வேலவன். இதுவரை தடைப்பட்டு நின்ற காரியங்களையும் இனிதே ஜெயமாக்கித் தருவார் வெற்றிவடிவேலவன்.
ஆவணி மாதம் என்பது அற்புதமான மாதம். வெயிலும் இல்லாத மழையும் வலுக்காத அற்புதமான மாதம். ஆடி மாதக் காற்றில் பூமியே குளிர்ந்திருக்கும் மாதம். ஆனி மாதத்தில் நல்ல விஷயத்தைச் செய்யலாம் என முடிவு செய்தவர்கள் எல்லோருமே, ஆடி மாதம் எப்போ முடியும், ஆவணி மாதம் எப்போ பிறக்கும் என்று காத்திருப்பார்கள். ஆவணி மாதம் வந்ததும் விசேஷ காரியத்துக்கான பிள்ளையார் சுழியைப்போடுவார்கள்.
ஆவணி மாதம் என்பது பூமி குளிர்ந்திருக்கும் அருமையான மாதம். இந்த மாதத்தில், விவசாயம் செய்யவும் வீடு மனை வாங்கவும் திருமணத்துக்கான நிச்சயதார்த்தம் முதலான விஷயங்களை மேற்கொள்ளவும் திருமண நிகழ்வை நடத்தவுமான அற்புதமான, மகோன்னதமான மாதம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆவணி மாதத்தின் ஞாயிற்றுக் கிழமை மிக மிக விசேஷம். அதேபோல், ஆவணி செவ்வாய்க் கிழமையும் விசேஷமான வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாள். இந்தநாளில் முருகப்பெருமானை வழிபடுவது மும்மடங்கு பலன்களை வழங்கக் கூடியது என்கிறார்கள் பக்தர்கள்.
ஆவணிச் செவ்வாயில், முருகக் கடவுளுக்கு விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் கொண்டு அலங்கரியுங்கள். முருகப்பெருமானை, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள்.
நம் வாழ்வில் இதுவரையிலான தடைகளையும் எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கி அருளுவார் வேலவன். வீட்டில் இதுவரை நிகழவிருந்த சுபகாரியங்களை நடத்தித் தந்தருள்வார். வீடு மனை வாங்கவேண்டும் என்ற சிந்தனையில் இருப்பவர்கள், ஆவணி மாதத்தில் முருகப்பெருமானை வணங்கி வந்தால், குறிப்பாக ஆவணிச் செவ்வாய்க்கிழமைகளில் வணங்கி வழிபட்டு வந்தால், வீடு மனை யோகம் நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.