Last Updated : 16 Aug, 2020 10:48 AM

 

Published : 16 Aug 2020 10:48 AM
Last Updated : 16 Aug 2020 10:48 AM

ஆடி மாதத்தின் கடைசி பிரதோஷம்; ஞாயிறு பிரதோஷம் ;  ராகுகாலமும் பிரதோஷமும் ஒரே நேரத்தில்! 

ஆடி மாதத்தின் கடைசி பிரதோஷம் இன்று. மேலும் ஞாயிற்றுக் கிழமை பிரதோஷம் என்பது மிக மிக விசேஷம். இன்று 16.8.2020 ஞாயிறு பிரதோஷம். பிரதோஷமும் ராகுகாலமும் ஒரே நேரத்தில் அமைந்துள்ள பிரதோஷத்தின் போது சிவனாரை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். தோஷங்கள் அனைத்தும் விலகும். வாழ்வில் சந்தோஷங்கள் பெருகும்!

பிரதோஷம் என்பது சிவனாருக்கு உரிய அற்புத வேளை. அருமையான நாள். பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்வது, நம் பாவங்களையெல்லாம் நீக்கும். புண்ணியங்களைத் தந்தருளும். சிவனாரின் பரிபூரணமான அருளைப் பெறுவோம். ஞான யோகங்கள் கிடைத்து நிம்மதியும் நிறைவுமாக வாழலாம் என்பது ஐதீகம்.

சனிக்கிழமை பிரதோஷம் சர்வ பாவ விமோசனம் என்பார்கள். அதேபோல் சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷமும் சிறப்பு வாய்ந்தது. வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர வாரப் பிரதோஷமும் ஐஸ்வரியங்களை தந்தருளக் கூடியது. வியாழக்கிழமையான குரு வாரப் பிரதோஷமும் மகத்துவம் நிறைந்தது.

இன்று ஞாயிற்றுக்கிழமை 16.8.2020 பிரதோஷம். ஞாயிறுப் பிரதோஷம். இப்படி ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகமிக உன்னதமானது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பிரதோஷ நேரம் மாலை 4.30 முதல் 6 மணி வரை. ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலம் என்பதும் மாலை 4.30 முதல் 6 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ராகுகாலமும் பிரதோஷ வேளையும் இணைந்திருக்கும் வேளையில், சிவாலயத்தில் நடைபெறும் அபிஷேக ஆராதனைக்கு நம்மாலான அபிஷேகப் பொருட்களை வழங்குவதும் பூக்கள் வழங்குவதும் கூடுதல் பலன்களைத் தரும் என்பது உறுதி. மேலும் இந்த சமயத்தில் வீட்டில் விளக்கேற்றி சிவ வழிபாடுகளைச் செய்தாலும் ருத்ரம் ஜபித்துப் பிரார்த்தனை செய்தாலும் நல்ல பலன்களை வழங்கி அருளுவார் ஈசன்!

ராகுகாலத்தின் போது துர்கைக்கு விளக்கு ஏற்றி வணங்குவோம். அதேபோல், நவக்கிரகங்களை அப்போது வழிபடுவதும் வலம் வந்து பிரார்த்தனை செய்வதும் விசேஷம். ராகு - கேதுவுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது, ராகு கேது தோஷங்களைப் போக்கி, கல்வி, உத்தியோகம், சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றங்களை வழங்கும்.

எனவே, ஞாயிறுப் பிரதோஷத்தில், சிவ வழிபாடு செய்யுங்கள். விளக்கேற்றுங்கள். முடிந்தால், வில்வம், செவ்வரளி, நந்திதேவருக்கு அருகம்புல் முதலானவற்றை வழங்குங்கள். முடிந்தால், சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, விநியோகியுங்கள்.

வீட்டில் சுபிட்சம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். தடைகள் காணாமல் போகும். பதவியிலும் பொருளாதாரத்தில் உயர்வு பெறுவது நிச்சயம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x