Last Updated : 14 Aug, 2020 09:12 PM

 

Published : 14 Aug 2020 09:12 PM
Last Updated : 14 Aug 2020 09:12 PM

ஆயுள் பலம் தருவார் சனி பகவான்

சனி பகவான், தவமிருப்பதில் அதீத விருப்பமும் பக்தியும் உள்ளவர். இல்லறத்தில் நாட்டமில்லாத குணம் கொண்டவர். ஆனால் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ளாமல்,சித்ரதா என்பவர், தன்னுடைய மகளை சனீஸ்வரருக்கு திருமணம் செய்து வைத்தார் என்கிறது புராணம்.

திருமணமாகி பல காலங்கள் ஓடின. மனைவியின் மீது பிரியமோ காதலோ ஆசையோ அன்போ இல்லாமலேயே இருந்தார் சனி பகவான். சதாசர்வ காலமும் தவத்திலேயே மூழ்கிக் கிடந்தார். ஒருகட்டம் வரை பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் மனைவி. தன்னையும் புரிந்துகொள்ளவில்லை, தான் அவனை உளப்பூர்வமாக நேசிப்பதையும் உணர்ந்துகொள்ளவில்லை. ஒரு புன்சிரிப்பைக் கூட நம் மீது காட்டாமல் இருக்கிறானே... ஒரு பித்தனைப் போல் தவம் செய்து, கண்கள் மூடி, அமர்ந்திருக்கிறானே... என ஆவேசமானாள். அவனுக்கு சாபமிட்டாள்.

’ ஒரு பெண்ணுடைய ஆசையும் அன்பும் தெரியாமல் எப்படி இருக்க முடிகிறது உங்களால்? ஒரு கணவருக்கு உரிய ஸ்தானத்தில் ஏன் வாழவே மாட்டேன் என்கிறீர்கள்? உங்களுடன் நானொருத்தி இருப்பதையே அறியாமல், தவத்தில் மூழ்கிக் கிடக்க மனம் எப்படி வந்தது? தவத்தின் பலனும் தவத்தின் ஆனந்த நிறைவும் உங்களுக்குக் கிடைக்காமலே போகட்டும்’ என்று சாபமிட்டாளாம். இதனால்தான் அன்றில் இருந்து அவரின் சிந்தனையும் பார்வையும் வக்கிரமாகவும் உக்கிரமாகவும் அதேசமயம், நேர்மையானவர்களையும் தவறு செய்யாதவர்களையும் தர்மத்துக்குக் கட்டுப்படுகிறவர்களையும் மட்டுமே கொண்டு ஆதரித்து அருள்பாலிக்கத் தொடங்கினார் என்றொரு தகவலும் புராணத்தில் உண்டு.

சனி பகவான், தராசு போன்றவர். எந்தப் பக்கமும் சாயாதவர். நீதி பரிபாலனம் செய்பவர். தர்மத்தின் பக்கமே துணை நிற்பவர். கரிய நிறம் கொண்டவர். கருப்பு நிற ஆடையை எப்போதும் அணிந்துகொண்டிருப்பவர். ஒரு கால் மட்டும் ஊனமுற்றவர். வலது திருக்கரத்தில் தண்டம் ஏந்தியும் இடது திருக்கரத்தில் வரத முத்திரையும் கொண்டிருப்பவர். வில்லேந்தி வருபவர். பத்மபீடத்தைக் கொண்டவர். அட்சமாலையைக் கொண்டு அஷ்ட குதிரைகளுடன் அதாவது எட்டுக் குதிரைகளுடன் கூடிய இரும்பு ரதத்தை வாகனமாகக் கொண்டு பவனி வருபவர்.

மேலும், கரிய மலர்கள் மீதும் நீலமலர்கள் மீதும் விருப்பம் கொண்டவர். சனி பகவானின் அதி தேவதை யமதருமன்.
சனீஸ்வர பகவானை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். மங்காத செல்வம் தந்து அருளுவார் சனீஸ்வரர். ஆயுள் பலம் தருவார். ஆரோக்கியம் தந்தருள்வார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x