

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''உலக உயிர்களுக்கு எல்லாம் வளமான, அமைதியான வாழ்க்கையைத் தந்தருள்க என்று இறைவனைப் பிரார்த்திக்கின்ற நிலையில், இந்தியத் திருநாட்டின் 74-வது சுதந்திர தினத்தை மிகவும் அமைதியாகவும், அடக்கமாகவும் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு பக்கம் கரோனாவால் லட்சக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கடுமையான வெள்ளச்சேதம், மலைச்சரிவு, குண்டு வெடிப்பு, தீ விபத்து, விமான விபத்து என்று உலகம் அழிந்துகொண்டிருப்பதை நமது கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படியான மோசமான நிலைகளைத் தவிர்ப்பதற்கு என்ன வழி?
காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற யானை, புலி, சிங்கம், ஆடு, மாடுகள் போன்ற தெய்வீகப் படைப்புகளை நாம் எந்தத் தொந்தரவும் செய்யக் கூடாது. எக்காரணம் கொண்டும் மரங்களை வெட்டவே கூடாது. சைவ உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். சட்டங்களை மதிக்க வேண்டும். சாதிகளாலும், மதங்களாலும், மொழிகளாலும் நம்மிடையே எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. ஏழை, எளியோர், வறுமையுற்றோர், உழைப்போர் எவராக இருந்தாலும் அவர்களை மதித்து நம்மால் இயன்றவரை உதவிகள் செய்திட முன்வர வேண்டும். உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான எல்லாம் வல்ல இறைவனைப் பணிந்து வணங்க வேண்டும்.
74-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாம் அனைவரும் இந்தியர்கள். சாதி, சமயம், மொழி, இனம், அரசியல் கடந்து எல்லோரும் இந்தியர்கள் என்ற அடிப்படையில் ஒன்று கூடி நம் நாட்டைக் காப்போம். மற்ற நாடுகளுக்கு நாம் வழிகாட்டியாய், முன் மாதிரியாய்த் திகழ்வோம். வாழ்க பாரதம்! வாழ்க மணித்திருநாடு''.
இவ்வாறு மதுரை ஆதீனம் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இதேபோல, அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தமிழகத்தைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுவதற்கும் வாழ்த்துத் தெரிவித்து மதுரை ஆதீனம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.