அழகெல்லாம் முருகனே... அருளெல்லாம் முருகனே!  - ஆடி கிருத்திகை...வேதனை தீர்க்கும் வேலவன் வழிபாடு! 

அழகெல்லாம் முருகனே... அருளெல்லாம் முருகனே!  - ஆடி கிருத்திகை...வேதனை தீர்க்கும் வேலவன் வழிபாடு! 
Updated on
1 min read

அழகு முருகனுக்கு, அருள் வழங்கும் குமரனுக்கு, ஆடி கிருத்திகை நன்னாளில், ஆராதனைகள் செய்வோம். பூஜிப்போம். பிரார்த்திப்போம். நம் வேதனைகளையெல்லாம் தீர்த்தருள்வான் வேலவன்.

நம்மைக் காக்கவும் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டவும் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றன. தெய்வ சக்திகள் இருக்கின்றன. ஆனாலும் மனசுக்கு மிக நெருக்கமாக, சாமான்ய மனிதர்களாலும் கொண்டாடி வழிபடக் கூடிய தெய்வங்கள்... விநாயகர், கிருஷ்ணர், கந்தக் கடவுள்.

முருகு என்றாலே அழகு என்றுதான் அர்த்தம். அதனால்தான் அழகெல்லாம் முருகனே... என்றும் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் என்றும் கொஞ்சி பூஜிக்கிறோம். நம் குறைகளையெல்லாம் அவனிடம் உரிமையாகச் சொல்லி வேண்டுகிறோம்.
ஆறுபடை வீடுகள் கொண்டவன் முருகப்பெருமான். என்றாலும் கூட, முருகக்கடவுள் குடிகொண்டிருக்கும் கோயில்கள் ஏராளம். எல்லா சிவாலயங்களிலும் கந்தனுக்கு சந்நிதி உண்டு. ஒவ்வொரு சிவாலயங்களில், விசேஷமான முருகப் பெருமானை தரிசிக்கலாம். இன்னும் பல ஊர்களில், முருகக் கடவுளுக்கென தனிக்கோயிலை அமைந்துள்ளது.

ஆறுபடை வீடுகளைத் தாண்டியும், முருகனுக்கென்றே உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்கள் ஏராளம். பாதயாத்திரை எனும் விஷயம் முருக பக்தர்களின் தனித்துவம் மிக்க பக்தி வெளிப்பாடு. 200 வருடங்களுக்கு முன்பிருந்தே, பாதயாத்திரையாக பழநிக்கு வரத் தொடங்கினார்கள் பக்தர்கள். அப்படி பாத யாத்திரையாக வரும் போது காவடி எடுத்துக் கொண்டும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் பக்தர்கள் வருவது கண்கொள்ளாக் காட்சி. அளப்பரிய பக்தி.

பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு பால் குடமேந்தி வருவார்கள். அலகுக் குத்திக் கொண்டு வருவார்கள். காவடி எடுத்து வருவார்கள். தைப்பூசம் வந்துவிட்டால், பங்குனி உத்திரம் வந்துவிட்டால், பக்தர்கள் விரதமிருந்து முருகப் பெருமானை வணங்குவார்கள்.

தை கிருத்திகையிலும் இப்படியான கோலாகலங்கள் நடக்கும். கார்த்திகை மாதக் கிருத்திகையிலும் மிக விசேஷமாகக் கொண்டாடுவார்கள். வைகாசி விசாகத்திலும் கந்தனை ஆராதிப்பார்கள் பக்தர்கள். ஆடி கிருத்திகையிலும் அழகன் முருகனைக் கொஞ்சி மகிழ்ந்து வேண்டிக் கொள்வார்கள்.

இன்று 12.8.2020 புதன்கிழமை. ஆடி கிருத்திகை. கார்த்திகேயப் பெண்கள் வளர்த்த கார்த்திகேயனுக்கு உகந்த நன்னாள். இந்தநாளில், வீட்டில் உள்ள முருகப்பெருமானின் படத்துக்கு செவ்வரளி முதலான செந்நிற மலர்கள் கொண்டு அலங்கரியுங்கள். வேதனை கொண்டிருக்கும் நம்மை வேல் கொண்ட முருகன் காத்தருள்வான். சூரனை அழித்தொழித்தது போல், நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகளையெல்லாம் அழித்து நமக்கு அருளுவான் வெற்றிவேலன்.

‘காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியினில் நோக்க...’ என்கிற உணர்ச்சிமிகுந்த ‘கந்தசஷ்டி கவசம்’ பாராயணம் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையையே இனிக்கச் செய்வான் கந்தகுமாரன். கடன் முதலான கஷ்டங்களில் இருந்து உங்களுக்கு நிவர்த்தியைத் தந்தருள்வான் முத்துக்குமரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in