வாஸ்து தோஷம் நீங்கும்; பித்ரு சாபம் நிவர்த்தியாகும்; வாழ்வை வளமாக்கும் பைரவ வழிபாடு! 

வாஸ்து தோஷம் நீங்கும்; பித்ரு சாபம் நிவர்த்தியாகும்; வாழ்வை வளமாக்கும் பைரவ வழிபாடு! 
Updated on
1 min read

பைரவரை வணங்கினால்,குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில் வணங்கி வழிபட்டால், பித்ரு தோஷம் விலகும். வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை நீக்கி அருளுவார் என்பது ஐதீகம். இன்று 11.8.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை அஷ்டமி.

அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள். சொர்ணபைரவரிடம், சக்திகளைப் பெற்று அவற்றை பக்தர்களுக்கு அருளவேண்டும் என்று சிவனாரின் ஆணையை, பைரவர் சொல்ல, அஷ்ட லட்சுமியரும் அப்படியே செய்து வருகின்றனர் என விவரிக்கிறது புராணம்.

அஷ்ட லட்சுமிகள், அதாவது அஷ்ட தேவதைகளிடம் இந்த சக்தியானது குறையும் போதெல்லாம், பைரவ வழிபாட்டை மேற்கொள்வார்கள். ஐஸ்வர்ய சக்தியைப் பெற்று அருளுவார்கள் என்பது ஐதீகம்.

அதன்படி, ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும், இவர்கள் பைரவரை நோக்கி தவமிருந்து அருளைப் பெறுகின்றனர் என்றும் தேய்பிறை அஷ்டமியில் யாரெல்லாம் பைரவ வழிபாடுகளைச் செய்து வருகிறார்களோ அவர்களுக்கு, வாழ்வில் இதுவரை இருந்த துக்கங்களும் தடைகளும் தவிடுபொடியாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.
ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில், பைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

தேய்பிறை அஷ்டமி அஷ்டமி பைரவ வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நன்னாள். இன்று11.8.2020 தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில், பைரவரை வணங்குங்கள்.

சாதாரணமாக, நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு அமைக்கப்பட்டிருக்கும். சில ஆலயங்களில், இருபக்கமும் நாய் வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார். இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவர், மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.

ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலான தொல்லைகளிலிருந்து விடுபட, வாழ்வில் வளம் பெற, திருமணத்தடைகள் நீங்கிட, பித்ரு சாபம் முதலான தோஷங்களில் இருந்து விடுபட்டு நிவர்த்தியாக, சனி தோஷம், வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் நீங்கிட... பைரவரை வழிபடுங்கள். வளமுடன் வாழலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in