Last Updated : 10 Aug, 2020 10:29 AM

 

Published : 10 Aug 2020 10:29 AM
Last Updated : 10 Aug 2020 10:29 AM

கஷ்டமெல்லாம்  தீர்க்கும் அஷ்டமி... கோகுலாஷ்டமி! - கிருஷ்ண ஜயந்தி ஸ்பெஷல்

கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கும் அஷ்டமி நன்னாளாக கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

ஆவணி மாத சுக்ல பட்ச அஷ்டமி, அத்தனைப் புண்ணியம் நிறைந்த நன்னாளாக மாறியதற்குக் காரணம்... பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அவர் அவதரித்த திருநாள். அன்றைய தினத்தை ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். இந்த முறை ஆடி மாதத்திலேயே வருகிறது கோகுலாஷ்டமி. 11.8.2020 செவ்வாய்க்கிழமை நாளைய தினம் கோகுலாஷ்டமித் திருநாள்.

தன் தங்கைக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தையால் தன் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்து பதறிக் கதறினான் கம்சன். முதல்கட்டமாக தங்கை தேவகியையும் அவளின் கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வந்தான். எட்டாவது குழந்தைதான் நமக்கு வில்லன் என்றபோதிலும் பிறந்த ஒவ்வொரு குழந்தையையும் கொன்றான். கலங்கித் துடித்தார்கள் வசுதேவரும் தேவகியும்!

ஏழாவது குழந்தை பலராமர். தேவகியின் வயிற்றில் கருவாகியிருந்தார். அப்போது ஸ்ரீமகாவிஷ்ணு என்ன செய்தார் தெரியுமா. மாயாதேவியை அழைத்தார். பலராமரின் கருவை, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவியரில் ஒருவரான ரோகிணியின் கர்ப்பப்பைக்குள் வைக்கும்படி அருளினார். தவிர, மாயாதேவியை நந்தகோபரின் மற்றொரு மனைவியான யசோதையின் வயிற்றில் கருவாக வளரும்படி பணித்தார். ஆக, பிறப்புக்கு முன்பிருந்தே விளையாடத் தொடங்கிவிட்டான் கண்ணன்.
எட்டாவதாக, கிருஷ்ண பகவான் தேவகியின் வயிற்றில் வளர்ந்தார். ஆவணி மாத சுக்ல பட்ச அஷ்டமியில் கிருஷ்ணர் அவதரித்தார். தாயும் தந்தையும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். அப்போது குழந்தையானது, ஸ்ரீமகாவிஷ்ணுவாக விஸ்வரூபம் எடுத்து காட்சி தர, வியந்து போனார்கள். இது அந்தத் தம்பதிக்குக் கிடைத்த அரிய வரம். ஏற்கெனவே வாங்கி வந்த வரம்.

முன்னொரு காலத்தில் சுதபா - பிருச்னி தம்பதியாக இவர்கள் இருந்தார்கள். 12 தேவ வருடங்கள், விஷ்ணுவை நினைத்து கடும் தவமிருந்தார்கள். இதன் பலனாக, அவர்களின் முன்னே காட்சி தந்தருளினார் மகாவிஷ்ணு. மேலும் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். ‘‘பரமாத்மாவான தாங்கள் எங்களுக்கு மகனாகப் பிறக்கவேண்டும்’’ என்றனர்.

மகாவிஷ்ணு... அப்போது... ‘’ அதன்படி, பிருச்னி கர்பா என்ற பெயரில் மகனாகப் பிறந்தேன். அடுத்த பிறவியில், காஷ்யபர் - அதிதி தம்பதியாகப் பிறந்தீர்கள். அப்போதும் உங்களுக்கு மகனாக உபேந்திரனாகப் பிறந்தேன். இப்போதும் பிறந்திருக்கிறேன். இந்த முறை என் பெயர் கிருஷ்ணர்’’ என்று அருளினார் மகாவிஷ்ணு.

அத்துடன் அவர்களின் பிறவி முடிவடைந்தது என்றும் வைகுண்டம் வரும் காலம் நெருங்கிவிட்டது என்றும் கம்சனை அழிக்கும் கடமை எனக்கு உண்டு என்றும் தெரிவித்தார் திருமால்.

என்னை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்துவிடுங்கள் என்றார். மாறாக, அங்கே அவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து சேர்த்துவிடுங்கள் என்றும் அறிவுரை கூறினார்.

இத்தனையும் நிகழ்ந்த நன்னாள்தான் ஆவணி சுக்ல பட்ச அஷ்டமித் திருநாள். கிருஷ்ண ஜயந்தி எனும் நன்னாள். இந்த நாளில், வீட்டு வாசலில் இருந்து வீட்டுப் பூஜையறைக்குள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, குழந்தையாகவே பாவித்து நாம் வரவேற்று பூஜிப்பது வழக்கம்.

அரிசி மாவில் கிருஷ்ணர் பாதம் வரைந்து குதூகலிப்போம். அந்த கிருஷ்ணர் பாதமே, நம் துயரங்களையெல்லாம் போக்கி, மகிழ்வைக் கொடுக்கவல்லது என்கின்றன ஞானநூல்கள்.

அன்றைய தினம்... அதாவது நாளைய தினம்... மாலை வரை விரதமிருக்கவேண்டும். பிறகு கிருஷ்ணருக்குப் பிடித்த சீடை முதலான பட்சணங்களை நைவேத்தியம் செய்து பூஜிப்போம்.

உண்மையான பக்தியுடன் கிருஷ்ண ஜயந்தி நாளில், பூஜித்து வழிபட்டால், ஏதேனும் ஓர் ரூபத்தில் கிருஷ்ணர்... நம் வீட்டுக்கே வருவார்; தீயதையெல்லாம் அழித்து அருளுவார்! நம் வறுமையைப் போக்கி, சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார்.

கிருஷ்ண பக்தியுடன் கோகுலாஷ்டமியைக் கொண்டாடுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x