

மகாவிஷ்ணுவின் அவதாரங்களிலேயே மிக மிக முக்கியமானது கிருஷ்ணாவதாரமும் ராமாவதாரமும். ராம பக்தி அளப்பரியது என்றால், கிருஷ்ண பக்திக்கு அவர் அருளிய ‘பகவத் கீதையே’ மிகப்பெரிய உதாரணமாகத் திகழ்கிறது.
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம் கிருஷ்ணாவதாரம். ஆவணி மாதத்தில், ரோகிணி நட்சத்திரத்தில், தேய்பிறை அஷ்டமியில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது என விவரிக்கிறது புராணம். எனவே அதுவே அவரின் ஜயந்தித் திருநாளாக, அவதார நன்னாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த முறை கிருஷ்ண ஜயந்தித் திருநாள், வருகிற 11.8.2020 செவ்வாய்க்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அந்தநாளில், இல்லத்தில் கண்ணனை அழைத்து, பட்சணங்கள் செய்து கொண்டாடுவோம்.
கிருஷ்ண ஜயந்தி நன்னாளில், வீட்டை முதலில் தூய்மைப்படுத்துங்கள். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரித்துக் கொள்ளுங்கள். சுவாமி படங்களுக்கு சந்தனம் குங்குமம் இடுங்கள்.
வாசலில் இருந்து பூஜையறை வரை, கிருஷ்ணர் பாதம் வரைந்து கொள்ளவேண்டும். இதனை, மாக்கோலத்தில், அதாவது பச்சரிசி மாவு அரைத்து, அதில் தண்ணீர் கலந்து வரைந்து வாசலில் இருந்து பூஜையறை வரைக்கும் இட்டுக்கொள்ளவேண்டும். இதை கிருஷ்ணர் பாதம் என்பார்கள். கிருஷ்ணரே இல்லத்துக்குள் வந்துவிட்டதான உணர்வைத் தரும் அற்புதம் இது.
அன்றைய நாளில், கிருஷ்ணரை நினைத்து விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். கிருஷ்ணருக்குப் பிடித்த பட்சணங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். வெல்லச்சீடை, காரச்சீடை, அதிரசம் முதலான பட்சணங்களை நைவேத்தியம் செய்வது வழக்கம்.
கிருஷ்ண ஜயந்தி நாளில், காலையில் இருந்தே விரதம் மேற்கொள்வார்கள். திரவ உணவு எடுத்துக்கொள்வார்கள். பாலும் பழமும் மட்டும் சாப்பிடுவார்கள். பிறகு, விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்துகொண்டிருப்பார்கள். பகவத் கீதை பாராயணம் மேற்கொள்வார்கள். விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், உடலை வருத்திக் கொண்டு விரதம் இருக்கவேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
விரதம் மேற்கொள்வோர், மாலையில் பூஜைகள் முடிந்த பிறகு, இரவில் நைவேத்தியங்களை சாப்பிட்டுவிட்டு, மறுநாள் காலையில் குளித்து, பூஜை முடித்து, விரதத்தை நிறைவு செய்யவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
‘என்னை நோக்கி நீங்கள் ஓரடி எடுத்துவைத்தால், நான் உங்களை நோக்கி பத்தடி எடுத்துவைத்து உங்களைத் தேடி வருவேன்’ என அருளியுள்ளார் பகவான் கிருஷ்ணர்.
கிருஷ்ண ஜயந்தி நன்னாளில், ‘கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா’ என்று கிருஷ்ண நாமம் சொல்லுவோம். கிருஷ்ணரின் பேரருளைப் பெறுவோம்.
கிருஷணர் பாதத்தை வரையும்போது, கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ணா.. என்று சொல்லிக்கொண்டே, கிருஷ்ணர் பாதத்தை வரையுங்கள். அந்தப் பாதத்தில் கிருஷ்ணரின் சாந்நித்தியம் உட்கார்ந்துகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.