

எவருக்கேனும் கல்யாணம் தாமதமாகிக் கொண்டிருந்தால், எல்லோரும் கேட்கும் கேள்வி...’ ஜாதகத்துல செவ்வாய் தோஷம் ஏதும் இருக்கா?’ என்பதுதான். நவக்கிரகங்களில், செவ்வாயின் பலம் அப்படி. செவ்வாய் பகவானின் அருளிருந்தால், திருமண பாக்கியம் கைகூடிவிடும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
செவ்வாய் உள்ளிட்ட சகல தோஷங்களையும் போக்கவல்லவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானின் அருளைப் பெறவேண்டுமெனில், முருகப்பெருமானின் அருளைப் பெறவேண்டும். முருகப்பெருமானின் அருட்பார்வை கிடைக்கவேண்டுமெனில், செவ்வாய் பகவானின் அருளைப் பெறவேண்டும்.
’இவ்ளோ சம்பாதிச்சும் சொந்தமா இன்னும் வீடு வாங்கற யோகம் வரலையே...’ என்று ஏக்கத்துடனும் கவலையுடனும் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும் வீடு மனை வாங்கும் யோகத்தை அருளக்கூடியவர் செவ்வாய் பகவான் தான்.
செவ்வாய்தான், பூமிகாரகன். மனை வாங்கும் யோகத்தைத் தருபவனும் செவ்வாய்; வாழ்க்கைத் துணையை அருளுபவனும் செவ்வாய். எனவே செவ்வாய் பகவானை வழிபடவேண்டியது மிக மிக அவசியம்.
வீடு, மனை என்பதே சொத்துகள்தானே. ஒருவேளை பூர்வீகச் சொத்துகள் இருந்தால், அது சகோதர வகையில் இருப்பவர்களுக்கும் பிரித்துக் கொடுக்கவேண்டும் அல்லவா. அப்படிப் பிரித்துக் கொடுப்பதில் எந்தச் சிக்கலும் இருக்கக்கூடாதெனில், சகோதரப் பாசமும் நேசமும் முக்கியம் அல்லவா. ஆகவே, சகோதர ஒற்றுமையையும் தந்தருளக்கூடியவர் செவ்வாய் பகவான்.
ஆகவே, செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியை சொல்லுங்கள்.
ஓம் வீரவத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம ப்ரசோதயாத்
எனும் செவ்வாய் பகவான் காயத்ரியைச் சொல்லுங்கள்.
அத்துடன் அங்காரகனையும் மனதில் நினைத்து வழிபடுங்கள்.
ஓம் பூமி புத்ராய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளம ப்ரசோதயாத்
என்று செவ்வாய்க்கிழமைகளிலும் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களிலும் மனதாரச் சொல்லி வழிபடுங்கள்.
வீடு மனை யோகம் கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை இருக்கும். செவ்வாய் முதலான தோஷங்கள் விலகும். தொடர்ந்து இந்த செவ்வாய் பகவான் காயத்ரியைச் சொல்லிவாருங்கள். உங்களுக்கு சொந்த வீடு அமைவது நிச்சயம்!