எதிரிகளை அழிப்பாள்; வெற்றியைக் குவிப்பாள்;  வேண்டிய வரங்களைத் தரும் வாராஹி வழிபாடு

எதிரிகளை அழிப்பாள்; வெற்றியைக் குவிப்பாள்;  வேண்டிய வரங்களைத் தரும் வாராஹி வழிபாடு
Updated on
1 min read

பஞ்சமி திதியில் வாராஹிதேவியை பிரார்த்தித்து வழிபடுங்கள். உங்கள் கோரிக்கைகளை அவளிடம் சொல்லி முறையிடுங்கள். கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். இதுவரை இருந்த எதிரிகள் தொல்லை ஒழியும். மறக்காமல் வாராஹியை வழிபடுங்கள்.

சப்தமாதர்களில் ஒரு தேவதை வாராஹி தேவி. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில், சப்தமாதர்கள் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள். பஞ்சமியில் வாராஹியை வழிபட்டால், வெற்றிக்கும் நிம்மதிக்கும் பஞ்சமே இல்லை என்பது முன்னோர் சொல்.

காலப்போக்கில், சப்தமாதர்கள் சந்நிதியும் குறிப்பாக வாராஹிக்கென்று சந்நிதியும் பெருகிவிட்டன. இன்னும் சொல்லப்போனால், வாராஹிதேவிக்கென தனிக்கோயிலே அமைக்கப்பட்டு, வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள்.

சப்தமாதர்களின் மகிமையையும் மகோன்னதத்தையும் தேவி சரிதம் சிலாகித்துச் சொல்கிறது. சப்த என்றால் ஏழு. ஏழு தேவியரைக் கொண்டதால் சப்தமாதர்கள் என்று இந்த தேவதைகளுக்கு பொதுப்பெயர் அமைந்தது. இவர்களை 700 மந்திரங்களால் விவரித்துச் சொல்லப்பட்டிருப்பதால் அதற்கு சப்த சதீ என்றும் போற்றியிருக்கிறார்கள்.

சும்ப - நிசும்ப அரக்கர்களை அழிக்க, அன்னை ஆதிபராசக்தி முடிவெடுத்தபோது, அவளுக்குத் துணையாக, அவளுக்கு உதவியாக, அவளுக்கு சேனைகளாக, படைத் தளபதிகளாக, அவளின் பக்கபலமாக, படையாக உருவெடுத்து வந்தவர்களே சப்தமாதர்கள் என்கிறது புராணம்.

இந்த ஏழு பேரில், வாராஹி தேவி, மகாசக்தி வாய்ந்தவள். நல்லவர்களுக்கு நடக்கும் தீயவற்றை ஒருபோதும் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டாள். இவளை வணங்கி ஆராதித்து வழிபட்டு வந்தால், சத்ரு பயம் அனைத்தும் நீங்கும். எதிரிகள் பயம் என்பதே இருக்காது. எதிரிகளைத் தோல்வியுறச் செய்வாள். உங்களுக்கு வெற்றியைத் தேடித்தருவாள். உங்கள் வாழ்வில், எதிர்ப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவாள் என்கிறார்கள் வாராஹி வழிபாட்டுக் குழுவினர்.

பஞ்சமி தினம் வாராஹி தேவிக்கான, அவளை வழிபடுவதற்கான, அவளை ஆராதித்து அருள் பெறுவதற்கான அற்புதமான நாள். இந்த நாளில், அவளுக்கு செந்நிற மலர்கள் அணிவித்து வழிபடுவது மிகுந்த பலனைத் தரும். தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் தந்தருள்வாள் வாராஹி தேவி! வளர்பிறை பஞ்சமி என்பது வாராஹிதேவிக்கு உரிய, அவளை வணங்கி ஆராதிக்கக்கூடிய அற்புதமான நாள். என்றாலும் எல்லா பஞ்சமி திதியிலும் வாராஹியை வணங்கலாம். வழிபடலாம்.

நாளைய தினம் 8.8.2020 சனிக்கிழமை பஞ்சமி. சப்தமாதர்களில் ஒருவராக இருக்கும் வாராஹிதேவியை வணங்குங்கள். எதிர்ப்புகள் விலகும். மனோபலம் பெருகும். தடைப்பட்ட மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். கடன் தொல்லையில் இருந்து உங்களை மீட்டெடுப்பாள் வாராஹி தேவி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in