

அவதரித்த ஆடி மாதம் முழுவதுமே ஆண்டாளைக் கொண்டாடலாம். வழிபடலாம். பிரார்த்தனை செய்து நம்முடைய கோரிக்கைகளை வைக்கலாம். ஒரு அன்னையின் கருணையுடன் நம் குறைகளைக் கேட்டறிவாள் ஆண்டாள். மங்காத செல்வங்களைத் தந்திடுவாள் ஆண்டாள் தாயார். சுமங்கலிகளுக்கும் கன்யா பெண்களுக்கும் மங்கலப் பொருட்கள் வழங்குங்கள். குழந்தை பாக்கியம் அருளுவாள் ஆண்டாள்.
ஆடி மாதம் பெண்களுக்கான மாதம். பெண்கள், மனமுருகி தெய்வ வழிபாடுகளைச் செய்வதற்கு உண்டான மாதம். குடும்பத்தில் ஆளுக்கொரு திசையென இருக்கும் சூழலைக் கூட மாற்றிவிடக் கூடிய மாதம்.
ஆடி மாதம் என்பது அம்பாளை வழிபடக்கூடிய மாதம். மகாலக்ஷ்மியை வணங்கக் கூடிய மாதம்.
ஆண்டாள் அவதரித்தது ஆடி மாத பூர நட்சத்திரத்தில் என்கிறது புராணம். ஆண்டாள் அவதரித்த மாதம் என்பதால், மாதம் முழுவதும் ஆண்டாளை வழிபடலாம். ஆண்டாளை மனதில் நினைத்து, விளக்கேற்றி வழிபடலாம். வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கும் ஆண்டாள் படத்துக்கும் துளசி மாலை சார்த்தலாம்.
ஆண்டாளை நினைத்துக் கொண்டு, அவளுக்கு பூஜைகள் செய்து, ஒரு செவ்வாய்க்கிழமையோ வெள்ளிக்கிழமையோ, சுமங்கலிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை-பாக்கு என மங்கலப் பொருட்களுடன் புடவை, ரவிக்கை அல்லது ரவிக்கை மட்டுமோ வைத்து கொடுத்து நமஸ்கரிக்கலாம்.
இதனால், இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி தங்கும். இதேபொல், சிறுமியருக்கும் வளையல், பொட்டு, கண்ணாடி, மருதாணி முதலான மங்கலப் பொருட்களை வழங்கலாம். வீட்டில், தடையாகிவிட்டிருந்த மங்கல காரியங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து நடைபெற அருளுவாள் ஆண்டாள்.
கன்யாபெண்களை மகிழ்விப்பதும் சுமங்கலிகளை மகிழ்வித்து மங்கலப் பொருட்கள் வழங்குவதும் மிகப்பெரிய புண்ணியம். சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகும். குழந்தை இல்லையே என்று ஏங்குவோருக்கு, விரைவில் சந்தான பாக்கியம் அருளுவாள் ஆண்டாள் அன்னை. பொன் பொருள் சேர்க்கை நிகழும். ஆடை ஆபரணச் சேர்க்கைகளை வழங்குவாள் ஆண்டாள்.
ஆண்டாள் அவதரித்த அற்புதமான ஆடி மாதத்தில், மாதம் முழுவதும் கொண்டாடுவோம் ஆண்டாளை! மனதாரப் பிரார்த்தனை செய்வோம் தாயாரிடம். மங்காத செல்வங்களை வாரி வழங்குவாள் கருணைத் தாயார் ஆண்டாள்.