Last Updated : 04 Aug, 2020 03:11 PM

 

Published : 04 Aug 2020 03:11 PM
Last Updated : 04 Aug 2020 03:11 PM

திருமணத் தடை நீக்கும் திருவிளக்கு பூஜை;  வீட்டிலேயே செய்யுங்கள்.. விடியல் நிச்சயம்! 

ஆடி வெள்ளிக்கிழமையில்... வீட்டிலேயே திருவிளக்கு பூஜை செய்யுங்கள். கால சர்ப்ப தோஷம் முதலான தோஷங்கள் நீங்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். இல்லத்தில் சந்தோஷங்கள் பெருகும். எதிர்காலத்தை ஒளிமயமாக்கித் தந்தருள்வாள் அம்பிகை.

ஆடி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். பூஜைகள் செய்வதற்கு உரிய அற்புதமான மாதம். விவசாயத்துக்கு நீர் வரத்து அதிகரிக்கும் மாதம். நீரின்றி அமையாது உலகு என்று நமக்கு உணர்த்தும் மாதம். அம்பாளுக்கு உரிய மாதம்.

அதனால்தான் ‘அம்பிகையைக் கொண்டாடுவோம்’ என்று இந்த மாதத்தின் வழிபாட்டைச் சொல்லிவைத்தார்கள். ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்று விவசாயத்தைச் சொல்லிவைத்தார்கள்.

ஆடி மாதம் என்பது காற்றும் மழையுமாக இருக்கும் காலம். சொல்லப்போனால், மழைக்காலத்தின் துவக்கம், இந்த ஆடி மாதத்தில்தான்.

இப்படியான, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வேப்பிலைக்கும் எலுமிச்சைக்கும் உண்டு. அதனாதான், ஆடி மாத வழிபாடுகளில் வேப்பிலையும் எலுமிச்சையும் முக்கியத்துவம் பெறுகின்றன.

திருமணமாகாத பெண்கள் ஆடி வெள்ளிக்கிழமையில், குத்துவிளக்கு வழிபாடு செய்வது கல்யாண வரத்தைத் தந்தருளும் என்பது ஐதீகம். குத்துவிளக்கு வழிபாட்டைச் செய்யச் செய்ய, பெண்களுக்கான திருமணத் தடைகள் அனைத்தும் நீங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆடி மாத வெள்ளிக்கிழமையில், வீட்டையெல்லாம் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். வாசலில் மாவிலைத் தோரணமும் வேப்பிலைத் தோரணமும் கட்டிக்கொள்ளுங்கள்.

பூஜையறையில் கோலமிட்டு, அதில் குத்துவிளக்கிற்கு சந்தனம் குங்குமமிடுங்கள், பூக்களால் அலங்கரியுங்கள். தீபமேற்றுங்கள். அதில் அம்மனை எழுந்தருளச் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். பின்னர், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். ஓம் சக்தி சொல்லி வழிபடுங்கள். அம்மன் போற்றி சொல்லி வழிபடுங்கள்.

நிறைவாக, குத்துவிளக்கிற்கு தீப தூப ஆராதனை செய்யுங்கள். பாயசம், கேசரி, சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் நைவேத்தியம் செய்து உங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமையில் குத்துவிளக்கு பூஜை செய்வதால், நல்ல கணவன் அமைவார்கள். மேலும், ஆடி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்வதால், தோஷங்கள் நிவர்த்தியாகும். ராகுகாலத்தில் குத்துவிளக்கு பூஜை செய்வதால், சர்ப்ப தோஷம், கால சர்ப்பதோஷம் முதலானவை அனைத்தும் நீங்கிவிடும்.

வாழ்க்கையை வளமாக்கும் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்றியருளும் விளக்குபூஜையச் செய்யுங்கள். விடியல் நிச்சயம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x