

மஞ்சள் பூசிக் குளிப்பது பெண்களுக்கு எப்போதுமே, மகத்துவம் தரக்கூடியது. மாங்கல்ய பலத்த்தைத் தரக்கூடியது என்றாலும் ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், மஞ்சள் பூசிக் குளிப்பது இன்னும் பல மகத்துவங்களையும் மகோரதங்களையும் தரும் என்பார்கள் ஆச்சார்யர்கள்.
ஆடிச் செவ்வாய்க்கிழமையில், ஆடி வெள்ளிக்கிழமைகளில்... சுமங்கலிகள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம்.
இதேபோல், ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.
கணவனின் ஆயுள் நீடிக்க இந்த விரதம் இருப்பார்கள். கல்யாணமாகியும் நீண்டகாலமாக குழந்தை வரம் வேண்டியும் இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்க பூஜிப்பார்கள். கன்னியருக்கு விரைவில் திருமண வரம் கிடைக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் இந்த பூஜையை மேற்கொள்வார்கள்.
ஆடிச்செவ்வாய்க்கிழமைகளில், இந்த பூஜையை மேற்கொள்வது வழக்கம். வீட்டில் உள்ள பெண்களை வைத்துக்கொண்டும் இந்த விரதம் மேற்கொள்வார்கள். அக்கம்பக்கத்து பெண்களெல்லாம் ஒன்று சேர்ந்தும் இந்த வழிபாட்டை மேற்கொள்வார்கள்.
செவ்வாய்க்கிழமையன்று, இந்தப் பூஜையை செய்து வேண்டிக்கொண்டால், கணவரின் ஆயுள் அதிகரிக்கும். பெண்களுக்கு தீர்க்கசுமங்கலி பாக்கியம் நிலைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலை மாறும்.
ஓரளவு வசதியுள்ளவர்கள், ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை (பெண் குழந்தைகளை) வீட்டுக்கு வரவழைத்து அவர்களை அம்பாளாகவே பாவித்து அவர்களுக்கு சந்தனம் குங்குமமிட்டு, அவர்களுக்கு விருந்தளிப்பார்கள். அவர்களுக்கு வெற்றிலை பாக்கு பழங்களுடன் புத்தாடை முதலானவற்றை வழங்குவார்கள்.
ஆடிச் செவ்வாயில், மாங்கல்யம் காக்கும் பூஜையை மேற்கொள்ளுங்கள். மங்காத செல்வத்தைத் தந்தருள்வாள் நாயகி! குழந்தைகளுக்கும் சுமங்கலிகளுக்கும் மங்கலப் பொருட்கள் வழங்குங்கள். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவாள் மகாசக்தி.