Last Updated : 04 Aug, 2020 10:40 AM

 

Published : 04 Aug 2020 10:40 AM
Last Updated : 04 Aug 2020 10:40 AM

ஆடி செவ்வாய், வெள்ளியில் பிள்ளையார் கொழுக்கட்டை  

கொழுக்கட்டை என்றாலே பிள்ளையார்தான் ஞாபகத்துக்கு வருவார். ஆடி மாதத்தில் எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கு உகந்த மாதமாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாத செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான நாட்கள்.

ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், கொழுக்கட்டை செய்து, பிள்ளையாரை வழிபாடு செய்வது வழக்கம். ஆடி மாதம் முழுவதுமே அம்மனுக்கு உகந்த மாதம். ஆடிக் கிருத்திகை என்பது முருகப்பெருமானுக்கு உரிய நாள். ஆடிப்பூரம் என்பது ஆண்டாள் அவதரித்த திருநாள். இப்படி எல்லா தெய்வங்களையும் வழிபடுவது போல், ஆடி செவ்வாயிலும் ஆடி வெள்ளியிலும் பிள்ளையாரையும் வழிபடுவார்கள் பக்தர்கள். தவிர, பிள்ளையாரை வழிபட்டுவிட்டுத்தானே மற்ற தெய்வங்களையே வழிபடுகிறோம்.

எந்தவொரு பூஜையிலும் ஹோமங்களிலும் பிள்ளையாருக்குத்தானே முதல் பூஜை, முதல் வழிபாடு.

சரி... பிள்ளையார் கொழுக்கட்டை செய்வது எப்படி?

தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப்,
பாசிப்பருப்பு - 6 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
துருவிய வெல்லம் - ஒன்றரை கப்,
நெய் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை இப்படித்தான் :
அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து ரவையின் பதத்துக்கு உடைக்கவும். அடிகனமாக உள்ள பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு 2 கப் நீர்விட்டு ஒரு கொதி விடுங்கள்.

பிறகு, இறக்கி கல், மணல் போக வடிகட்டிவிடவேண்டும். மீண்டும் அடுப்பிலேற்றி தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து உடைத்த ரவையைச் சேர்க்கவும். பாதி வெந்ததும் இறக்கி கைகளில் நெய் தொட்டுக்கொண்டு உருண்டைகளாக உருட்டி இட்லித்தட்டில் வைத்து அடுப்பிலேற்றினால்... ஆவி வந்த பிறகு எடுத்தால் வெள்ளிப்பிள்ளையார் கொழுக்கட்டை ரெடி.

ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில், பிள்ளையாரை மணையில் வைத்து, அவரை அலங்கரித்து, அருகம்புல் மாலை சார்த்தி பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். இந்தக் கொழுக்கட்டையை நைவேத்தியமாகச் செய்து படைப்பதும் அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவதும்... குடும்பத்துக்கு மிகப்பெரிய நன்மைகளையெல்லாம் தரும். சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுத் தரும். மலை போல் இருந்த துன்பங்கள் அனைத்தும் பனியென விலகும் என்பது ஐதீகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x