ஊசிமுனைத் தவம்; ஆடித்தபசு நாயகியை வேண்டுவோம்! 

ஊசிமுனைத் தவம்; ஆடித்தபசு நாயகியை வேண்டுவோம்! 
Updated on
1 min read

ஊசிமுனையில் அம்பாள் தவமிருந்து சிவனருளைப் பெற்ற நன்னாளே ஆடித்தபசு. தபசு என்றால் தபஸ் என்று அர்த்தம். தவம் என்று அர்த்தம்.

ஆடித்தபசு என்றாலே, நம் நினைவுக்கு வரும் திருத்தலம்... சங்கரன்கோவில். இந்தத் திருத்தலத்தில் எத்தனையோ விழாக்கள் சீரும் சிறப்புமாக நடைபெற்றாலும் ஆடித்தபசு விழா இங்கே வெகு விமரிசையாக நடைபெறும்.

எல்லா சிவ தலங்களிலும் ஆடித்தபசு விழாவானது நடைபெறும் என்றாலும் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் குடிகொண்டிருக்கும் திருத்தலத்தில், கோலாகலமாக நடைபெறும் ஆடித்தபசு திருவிழா.

ஊசிமுனையில் நின்றுகொண்டு, சிவனாரை வேண்டி தவமிருந்தாள் அம்பிகை. ஆடி மாதத்தில் அம்பாள் தபஸ் இருந்து, அவளுக்கு சிவனார் திருக்காட்சி தந்தார் என்கிறது புராணம். இதைத்தான் ஆடித்தபசு என்று கொண்டாடுகிறோம். வழிபடுகிறோம். பிரார்த்தனை செய்கிறோம். நாளைய தினம் 2.8.2020 ஞாயிற்றுக்கிழமை ஆடித்தபசுத் திருவிழா.

ஹரி வேறு ஹரன் வேறு என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஹரியையும் ஹரனையும் ஒன்றாகப் பார்க்கவேண்டுமென விரும்பினாள் உமையவள். அதற்காகத்தான் ஊசி முனையில் கடும் தவம் இருந்தாள். தவத்தின் பலனாக, சங்கரனும் நாராயணரும் சங்கரநாராயணராகத் திருக்காட்சி தந்தருளினார்கள். அப்படி காட்சி தந்த நாள்தான் ஆடித்தபசுத் திருவிழா.

கோமதியன்னையின் கருணையும் கடாக்ஷமும் சொல்லில் அடக்கமுடியாதது. அதனால்தான் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில், பெண் குழந்தை பிறந்தால், கோமதி என்றே பெயர் சூட்டி வருவது இன்றளவும் தொடர்கிறது. இன்றைக்கும் அந்த வழக்கம் இருந்து வருவதைப் பார்க்கலாம்.

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை, ஆடித்தபசு. ஆடிப்பெருக்கும் கூட. ஆடித்தபசு விழாவும் ஆடிப்பெருக்கு விழாவும் ஒரேநாளில் வருவது கூடுதல் விசேஷத்துக்கு உரியது.

இந்த அற்புதமான நாளில், கோமதி அன்னையை, உமையவளை, பராசக்தியை, ஈசனை, மகாவிஷ்ணுவை, சங்கரநாராயணரை வீட்டில் இருந்தபடியே மனதாரத் தொழுவோம். மங்கல காரியங்கள் அனைத்தையும் தடையின்றி நடத்தித் தந்தருள்வார்கள்.
காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றுங்கள். சிவனாருக்கும் அம்பாளுக்கும் செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். பெருமாள் படத்துக்கு துளசி சார்த்துங்கள். ஆடிப்பெருக்குடன் இணைந்து வந்திருக்கிற ஆடித்தபசு வைபவத்தையும் ஒருசேரக்கொண்டாடி பிரார்த்திப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in