Last Updated : 01 Aug, 2020 05:05 PM

 

Published : 01 Aug 2020 05:05 PM
Last Updated : 01 Aug 2020 05:05 PM

ஆடிப்பெருக்கில்... கலவை சாதப் படையல்!

ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதத்தில் பெருகுவது என்று அர்த்தம். அது ஏன் ஆடி மாதத்தில் பெருகுவது? பருவமழை அப்போதுதான் வலுவடையும். காவிரி மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அதாவது காவிரியிலும் காவிரியின் கிளை பிரிந்த ஆறுகளிலும் இந்த வழிபாடுகள் விமரிசையாக நடைபெறும்.

ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதை, ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுவது வழக்கம்.

ஒகேனக்கல்லில் நுழைவதில் இருந்தே காவிரியை வரவேற்கவும் ஆராதிக்கவும் ஆங்காங்கே கூடிவிடுவார்கள் மக்கள். காவிரி புகும் பட்டினமான... அதாவது காவிரியானது கடலில் கலக்கிற பூம்புகார் வரையிலும் இந்தக் கொண்டாட்டமும் வழிபாடுகளும் நீளும்.

ஆடிப்பெருக்கு நாளில், காவிரித்தாயை வழிபட்டால், இல்வாழ்க்கை இனிதாகும். குடும்பம் மேன்மையுறும். இல்லத்தில் இருந்த தரித்திர நிலை மாறும். சுபிட்சம் நிலவும். சகல ஐஸ்வரியங்களும் பெருக்கெடுக்கும் என்பது ஐதீகம்.

ஆடி பதினெட்டாம் நாளான ஆடிப்பெருக்கு அன்று, நதிக்கரைகளில் கோலாகலத்துக்கும் உற்சாகத்துக்கும் குறைவிருக்காது. எல்லோரும் கொண்டாடும் விழாதான் என்றபோதும், இது முழுக்க முழுக்க பெண்களுக்கான திருவிழா. பெண்களுக்கான பண்டிகை. பெண்கள் வழிபடவேண்டிய வைபவம்.

காலையில் எழுந்து குளித்து முடித்துவிடுவார்கள் எல்லோரும். பூ, மஞ்சள், குங்குமம், வளையல், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம் என்று மங்கலப் பொருட்களுடன் கரைக்கு வருவார்கள். சிறுவர்களும் சிறுமிகளும் மணலெடுத்து விளையாடுவார்கள். இளம்பெண்கள், கும்மியடித்து விளையாடுவார்கள். சமீபத்தில் திருமணமானவர்கள், தம்பதியாக, பட்டு வஸ்திரம் உடுத்திக்கொண்டு, மணக்கோலத்தில் வருவார்கள்.

கரைகளில், கல்லைக் கொண்டு அடுப்பாக்கி, பொங்கலிடத் தொடங்கிவிடுவார்கள். இதேபோல், வீடுகளில், ஆடிப்பெருக்கு நாளில், சித்ரான்னம்தான் உணவாக சமைப்பார்கள். அதாவது, சர்க்கரைப் பொங்கல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம், கதம்ப சாம்பார் முதலானவற்றை வீட்டுப் பூஜையறையில் சுவாமிக்குப் படையலிடவேண்டும். பின்னர், காகத்துக்கு உணவிட்டு, அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குங்கள்.

உங்கள் வாழ்க்கையில் பல நல்லதுகளை, இந்த ஆடிப்பெருக்கு வழிபாடு அமைத்துத் தரும்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x