ஸ்ரீரங்கத்தில் இருந்து அயோத்திக்கு அனுப்பப்பட்ட கோயில் பிரசாதம், காவிரி-கொள்ளிட ஆறு மண்

ரங்கநாதர் கோயில் பிரசாதம் மற்றும் காவிரி-கொள்ளிட ஆறு மண் ஆகியவற்றை அனுப்பும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் உள்ளிட்டோர்.
ரங்கநாதர் கோயில் பிரசாதம் மற்றும் காவிரி-கொள்ளிட ஆறு மண் ஆகியவற்றை அனுப்பும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோயிலுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பிரசாதம் மற்றும் காவிரி - கொள்ளிடம் ஆறுகளின் மண் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வில், பிரதமர் மோடி பங்கேற்று கோயில் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்.

இதையொட்டி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தமிழ்நாடு- கேரளம்- புதுச்சேரி மாநிலங்களின் அமைப்புச் செயலாளர் நாகராஜன், மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன், பஜ்ரங் தள் மாநில அமைப்பாளர் பரத், ஆர்.எஸ்.எஸ். திருச்சி கோட்டத் தலைவர் செல்லத்துரை, திருவெறும்பூர் பகுதி தலைவர் வேல்முருகன் சம்பத் ஆகியோர் காவிரி- கொள்ளிடம் ஆறுகளில் சிறிதளவு மண் சேகரித்தனர். பின்னர், மண் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் ஆகியவற்றை அயோத்திக்கு பார்சலில் இன்று (ஜூலை 31) அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சேதுராமன் கூறுகையில், "ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு. இதையொட்டி, நாட்டின் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து மண் எடுத்து அனுப்புமாறு அறிவுறுத்தியிருந்தனர். எனவே, திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து சிறிதளவு மண் சேகரித்தோம். மண்ணுடன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து வழங்கப்பட்ட பட்டு வஸ்திரம், மாலை, மஞ்சள் காப்பு ஆகிய பிரசாதத்தையும் அயோத்திக்கு பார்சலில் அனுப்பி வைத்துள்ளோம்.

ராமர் இக்‌ஷவாகு குலத்தைச் சேர்ந்தவர். அந்தக் குலத்தவருக்கு ரங்கநாதர்தான் குலதெய்வம். எந்தவொரு காரியத்தையும் தங்கள் குலதெய்வங்களை வழிபட்டு அதன்பிறகு தொடங்குவதுதான் இந்துக்களின் வழக்கம். அந்தவகையில், ராமர் கோயில் பூமி பூஜைக்கு ரங்கநாதர் கோயிலில் இருந்து பிரசாதம் அனுப்பப்பட்டது சிறப்பானது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in