

சக்தி வாய்ந்த மாதம் இது. சக்தி என்று அழைக்கப்படும் பெண் தெய்வங்களுக்கு உரிய மாதம் இது. அற்புதமான ஆடி மாதத்தில், வளர்பிறை பஞ்சமியில் வாராஹி தேவியை மனதார வழிபடுங்கள்.
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை பஞ்சமி என்பது வாரஹி தேவிக்கான நாள். அவளை ஆராதிக்கக் கூடிய நாள். அப்படியிருக்க, ஆடி மாத வளர்பிறை பஞ்சமி என்பது இன்னும் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.
ராஜராஜ சோழன் எந்தச் செயலைத் தொடங்கினாலும், வராகியை வழிபட்ட பின்னரே தொடங்குவார் என்பார்கள். இதனால் இந்த அம்மனை சோழ தேசத்தின் வெற்றித்தெய்வம் என்றும் காவல் தெய்வம் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள். தஞ்சை பெரியகோயில் எழுப்பப்படுவதற்கு முன்பே, வாராஹி வழிபாடு இருந்துள்ளது என்றும் அவளுக்கு சிலை எழுப்பி வணங்கப்பட்டு வந்ததாகவும் சொல்கிறார்கள்.
மற்ற கோயிலில் எங்கும் இல்லாத ஒரு நடைமுறையும் தஞ்சைப் பெரிய கோயிலில் உண்டு.
எங்கும் எந்த வழிபாட்டைத் தொடங்கினாலும், முதலில் விநாயகரை வணங்குவதே மரபு. ஆனால் இங்கு சிவவழிபாட்டைத் தொடங்குபவர்கள் விநாயகருக்குப் பதிலாக வராஹியை வழிபடுகின்றனர்.
சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்கை எனும் சக்தியின் தளபதியான வாராஹிக்கு பெரிய கோயிலில் பின்னர் சந்நிதி வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது.
கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. இங்கு என்ன வேண்டிக் கொண்டாலும் உடனே நிறைவேறுகிறது என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். . திருமணமாகாதவர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் திருமணவரம் உடனே கைகூடும் என்பது ஐதீகம்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மனமுருக பிரார்த்தனை செய்தால் குழந்தை பாக்கியம் கைகூடும். தவிர வழக்கு விவகாரங்கள், வியாபாரச் சிக்கல்கள் குறித்து வீட்டில் இருந்தபடியே வேண்டிக்கொண்டால் பிரச்சினைகள் தீரும் என்பது உறுதி.
ஸ்ரீ வராஹி காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்
என்கிற வாராஹி காயத்ரியை சொல்லுங்கள். வளர்பிறை பஞ்சமி என்றில்லாமல் எந்தநாளிலும் சொல்லலாம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முக்கியமாகச் சொல்லலாம்.
வளமான வாழ்வைத் தரும் வாராஹியை மனதார வழிபடுங்கள்.