Last Updated : 03 Sep, 2015 12:30 PM

 

Published : 03 Sep 2015 12:30 PM
Last Updated : 03 Sep 2015 12:30 PM

மண்ணில் விளைந்த நல்முத்து

கோகுலம். ராதா தலைமையில் சிறுமிகள் எல்லாம் விதை விதைப்பதில் ஈடுபட்டிருந்தனர். கண்ணனும் அவன் குழாமும் வழக்கம் போல் அவர்களை விளையாட அழைத்தனர். ராதா உட்பட சிறுமிகள் அனைவரும் வர மறுத்தனர். “ராதா, நீங்கள் எல்லாம் என்ன செய்கிறீர்கள்?” என்று கண்ணன் கேட்டான். “நல்முத்து விவசாயம் செய்கிறோம். பார்த்தால் தெரியவில்லையா?” என்று வெடுக்கென்று சொன்னாள் ராதை.

கண்ணனும் அவள் செய்யும் விவசாயத்தில் பங்குகொள்ள எண்ணினான். “ராதா நாங்களும் விதைக்க வரலாமா?” என்று தேனொழுகக் கேட்டான் கண்ணன். “இவை பெண்களுக்கானது. முத்துக்கள் நிறைய விளையும். நாங்கள் மாலை கோர்த்துப் போட்டுக்கொள்வோம். அதனால் உங்களைச் சேர்த்துக்கொள்ள முடியாது” என்று கண்டிப்பாகக் கூறியபடியே வெண்முத்துக்களை மண்ணில் விதைத்துக்கொண்டே சென்றாள் ராதா.

மிகுந்த வருத்ததுடன் வீடு வந்த கண்ணன், அன்னை யசோதாவிடம், “அம்மா எனக்கு கொஞ்சம் முத்துக்கள் தா” என்று கேட்டான் சுட்டிக் குழந்தை கண்ணன். இதனைக் கேட்டு ஆச்சரியமடைந்த யசோதா காரணம் கேட்க, ராதாவின் முத்து விவசாயம் குறித்து விளக்கினான் கண்ணன். “கண்ணா, என் செல்வமே, முத்துக்கள் கடலின் ஆழத்தில் கிடைப்பவை. அவை மண்ணில் விளைவது அல்ல” என்று எடுத்துக் கூறினாள் யசோதா.

இசையால் விளைந்த முத்துக்கள்

ஆனால் கண்ணனின் பிடிவாதம் கண்டு, சில முத்துக்களை அவனுக்கு அளித்தாள். அம்முத்துக்களை எடுத்துச் சென்ற கண்ணன், ராதா என்னவெல்லாம் செய்தாளோ அவற்றைத் தானும் செய்தான். முத்து விதைக்கப்பட்டது. தான் விவசாயம் செய்த நிலத்தில், மரத்தடியில் கண்ணன் தன் நண்பர்களுடன் அமர்ந்து புல்லாங்குழல் ஊதினான். முத்துக்கள் முளைவிட்டன. அவை பூமி பிளந்து துளிர்விட்டன.

செடிகள் மளமளவென்று மாலைக்குள் வளர்ந்து நின்றன. சிறிய முத்து மொட்டுக்கள் மலரத் தயாராயின. கண்ணன் தொடர்ந்து குழல் ஊதிகொண்டே இருந்தான். அந்த நாதம் பெருக, பெருக ஒரு முத்து விதைத்த இடத்தில் முளைத்த செடியில் ஆயிரம் நல்முத்துக்கள் தோன்றின.

பூரண நிலவொளியில் முத்துக்கள் மின்னின. அவற்றை அறுவடை செய்தான் கண்ணன். கண்ணனின் குட்டிக் கையில் ஒரு பிடி அளவு முத்துக்கள்தானே யசோதா தந்தாள், ஆனால் இசை கேட்டு அவை ஆயிரம், பல்லாயிரம் மடங்கு விளைந்திருந்தன. மூட்டை, மூட்டையாக அவற்றைக் கொண்டுவந்து அன்னை யசோதாவிடம் கொடுத்த கண்ணன், “எனக்கும், என் நண்பர்களுக்கும் இதனை மாலைகளாகக் கோத்துத் தா அம்மா” என்று கொஞ்சினான். ஆச்சரியகரமாக ஒளிர்ந்த அந்த முத்துக்களை விடிய, விடியக் கோத்து மாலைகள் ஆக்கினாள் யசோதா. மாலைகள் கூடை முழுவதும் நிரம்பி வழிந்தன.

இதனைக் கண்ட கண்ணன் அக மகிழ்ந்தான். அப்போது ராதா அழுதுகொண்டே அங்கு வந்தாள் “என் நிலத்தில் முத்துக்கள் விளையவில்லை” என்று கண்ணனிடம் புகார் படித்தாள். ராதாவின் கண்ணீர் கண்ட கண்ணன் பதறினான். தன் கையில் அள்ளியிருந்த மாலைகள் அனைத்தையும் அப்படியே ராதாவிடம் கொடுத்து சமாதானப் படுத்தினான். ராதாவும் யசோதாவும் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x