Last Updated : 23 Jul, 2020 07:42 PM

 

Published : 23 Jul 2020 07:42 PM
Last Updated : 23 Jul 2020 07:42 PM

ஒரு டம்ளர் பால் போதும்... நாக சதுர்த்தி விரதத்துக்கு! ஏழு தலைமுறை சர்ப்ப தோஷத்தை போக்கும் நாக சதுர்த்தி

நாக சதுர்த்தி விரதம் மேற்கொண்டால், தலைமுறை தலைமுறையாக உள்ள தோஷங்கள் விலகும். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷ, ராகு - கேது தோஷம் முதலானவை நீங்கும். கணவன் மனைவி இடையே உள்ள பிணக்குகள், பிரிவுகள் முடிவுக்கு வரும்.

கணவரின் தேக ஆரோக்கியமின்மை குணமாகும். தீர்க்க ஆயுள் கூடும். மாங்கல்ய பலம் பெருகும். தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். தோஷத்தால் தாமதமாகிக் கொண்டிருந்த காரியங்கள் இனி நடந்தேறும். தொழிலில் இதுவரை இல்லாத அளவுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். ஏழு தலைமுறையாக இருக்கும் சாபமும் கூட நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

எடுத்த காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். அதாவது, புதிதாக தொழில் செய்யலாம் என்றிருப்பார்கள். ஆனால் தள்ளிக்கொண்டே போகும். இடம் வாங்கியிருப்பார்கள். ஆனால் வீடு கட்டுவது மட்டும் இழுத்துக் கொண்டே போகும். எவ்வளவு வந்தாலும் போதவில்லையே... நாலு காசு சேர்க்கமுடியவில்லையே என்று வட்டி, தவணை என்று வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும். இவர்களெல்லாம் நாக சதுர்த்தி பூஜை செய்தால், சகல யோகங்களும் கிடைக்கப் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.

ஆடி வெள்ளிக்கிழமையான நாளைய தினம் 24ம் தேதி, ஆடிப்பூரமும் கூட. அன்றைய தினம் தான் நாக சதுர்த்தி. நாளைய தினம் 24ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.50 மணிவரைக்கும் (மாலை 4.57) சதுர்த்தி இருக்கிறது. எனவே அதற்குள்ளாக நாக சதுர்த்தி விரதம் மேற்கொள்வதே சரியானது. எனவே, காலையில் எழுந்ததுமே பூஜையைச் செய்வது உத்தமம் (மாலை அந்த நேரத்துக்குள், அதாவது சதுர்த்தி முடிவதற்குள் செய்துவிடவேண்டும் என்பதை மறக்காதீர்கள்).

நாக சதுர்த்தி விரதம் மேற்கொள்ளும் முறைகள் எப்படி?

இந்த நாளில் உபவாசமாக விரதம் இருக்கமுடிந்தால் இருக்கலாம். இல்லையென்றாலும் தோஷமில்லை. அதேசமயம், வயோதிகர்கள், குழந்தைகள், ஆரோக்கியத்தில் சின்னச்சின்ன குறைபாடுகள் உள்ளவர்கள், சாப்பிடாமல் இருக்கலாம். முடிந்தவர்கள், விரதம் மேற்கொள்ளுங்கள்.

காலையில் எழுந்து வழக்கம் போல் குளித்துவிடுங்கள். பூஜையறையில், நாகர் சிலை ஏதேனும் இருந்தால் அந்த சிலையை தனியே தாம்பாளம் ஒன்றில் வைத்து பாலபிஷேகம் செய்யலாம். நாகர் சிலை இல்லையே என்று வருந்தத் தேவையில்லை. பெரும்பாலும் அம்பாள் படங்களில் நாகரும் இருப்பார். இதில் ஏதேனும் ஒரு அம்பாள் படத்தை வைத்துக்கொண்டு, மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரிக்கலாம்.

நாகருக்கு உகந்தது உளுந்து மற்றும் கொள்ளு. ராகு மற்றும் கேதுவுக்கு உகந்த தானியங்கள் இவைதானே! அதாவது சர்ப்பம்தானே. எனவே இதைக் கொண்டு செய்யப்பட்ட சுண்டல் நைவேத்தியம் செய்யலாம். கூடவே, கொஞ்சம் காய்ச்சிய பால் வைத்துக்கொள்ளுங்கள்.

அம்பாள் ஸ்லோகம் படிக்கலாம். அம்பாள் துதி பாராயணம் செய்யலாம். பிறகு நைவேத்தியமெல்லாம் முடித்து, வணங்கி, பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். இதையடுத்து, அந்த நைவேத்தியம் செய்த பாலை அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று புற்றில் பால் விடலாம். பொதுவாகவே புற்று என்பது கோயிலுக்கு எதிரில் அல்லது அருகில் இருக்கும். ஒருவேளை கோயிலுக்குள்தான் புற்று இருக்கிறது என்றால், அது பூட்டப்பட்டிருக்கிறதே என்றால், கவலையோ வருத்தமோ படவேண்டாம்.

வீட்டுக்கு அருகில் அரசமரம் இருந்தாலோ வேம்பு இருந்தாலோ (வேப்பமரம்) அதனடியில் லேசாக குழிபோல் செய்துகொண்டு, அதனுள்ளே பால் விடலாம். பின்னர் வீட்டுக்கு வந்து ஒருமுறை நமஸ்கரித்து விட்டு, மீண்டும் ஒருமுறை தீபாராதனை காட்டிவிட்டு, பூஜையை நிவர்த்தி செய்யலாம். இதன் பிறகு சாப்பிடலாம். விரதம் மேற்கொள்ளாமல் சாப்பிட்டவர்கள் கூட இந்தப் பூஜையை இவ்விதமாகச் செய்து நிவர்த்தி செய்யலாம் என்கிறார் வெங்கடேச குருக்கள்.

நாக சதுர்த்தி நாளில், மிக மிக எளிமையான இந்த வழிபாட்டைச் செய்யுங்கள். சர்ப்ப தோஷத்தில் இருந்து விமோசனம் பெறுவீர்கள். தடைப்பட்ட சகல விதமான மங்கல காரியங்களும் நடந்தேறும். பிரிந்த கணவனும் மனைவியும் ஒன்று சேருவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x