

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் ஏழாம் நாளான நேற்று (ஜூலை 22) இரவு சயனத் திருக்கோல சேவை நடைபெற்றது.
108 திவ்ய தலங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று திருத்தேரோட்டம் நடைபெறும். மொத்தம் பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 7 ஆம் திருநாள் அன்று நடக்கும் சயன திருக்கோல சேவை மிகவும் புகழ் பெற்றதாகும்.
இந்நிலையில், தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதிலுமுள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய கோயில் விழாக்கள் தடை பெற்று விடக்கூடாது என்பதற்காக ஒரு சில நிபந்தனைகளுடன் கோயில் வளாகத்திலேயே திருவிழாக்கள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகின்றன.
அதுபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஏழாம் நாள் திருவிழாவாக ஸ்ரீ ஆண்டாள் மடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் தலை வைத்து இருக்கும் சயன திருக்கோல சேவை நடைபெறும்.
இந்த சயன திருக்கோல சேவை எனப்படும் வைபவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே நடைபெறும் என்பதால் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கோயகல் பிரகாரத்தில் நடைபெற்ற சயனசேவை நிகழ்ச்சியில் திருக்கோயில் பட்டர்கள் மற்றும் நிர்வாக அலுவலர்கள் மற்றும் தனிமனித இடைவெளியுடன் பங்கேற்றனர்.