Last Updated : 22 Jul, 2020 07:29 PM

 

Published : 22 Jul 2020 07:29 PM
Last Updated : 22 Jul 2020 07:29 PM

தலையெழுத்தை திருத்தி அருளும் திருப்பட்டூர் பிரம்மா; பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்ம மந்திரம்

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் சுமார் 28வது கிலோமீட்டரில் உள்ளது சிறுவாச்சூர். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் பயணித்தால் திருப்பட்டூர் திருத்தலத்தை அடையலாம்.

இந்தத் தலத்தின் இறைவனின் திருநாமம் - ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர். அம்பாள் திருநாமம் - ஸ்ரீபிரம்ம சம்பத் கெளரி. இங்கே உள்ள ஒவ்வொரு சந்நிதியும் சாந்நித்தியம் நிறைந்தது. புராண காலத்தில் திருப்பிடவூர் என்றும் திருப்படையூர் என்றும் குறிக்கப்பட்டுள்ள இந்தத் தலத்தில், முருகப்பெருமான் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார்.
இதேபோல், யோக சூத்திரத்தை அருளிய பதஞ்சலி முனிவரின் திருச்சமாதி எனப்படும் பிருந்தாவனமும் அமைந்திருக்கிறது. சித்தபுருஷரின் சமாதி அமைந்திருப்பதால், இன்னும் இன்னுமான சக்தியை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருப்பட்டூர்.

இப்படிப் பல பெருமைகள் இருந்தாலும் பிரதான நாயகனாக, திருத்தல நாயகனாகத் திகழ்கிறார் பிரம்மா. தனிச்சந்நிதியில், பத்மபீடத்தில், கிழக்குப் பார்த்தபடி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் பிரம்மா.

தன் கர்வத்தாலும் ஆணவத்தாலும் ஒரு தலையையும் படைப்புத் தொழிலையும் இழந்த பிரம்மா, இங்கே வந்து, பிரம்ம தீர்த்தம் உண்டுபண்ணி, 12 தலத்து சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து தவமிருந்து வேண்டினார்.

இதன் பலனாக, அம்பாளின் சிபாரிசுடனும் கருணையுடனும் சிவனருளைப் பெற்றார். ‘இழந்த உன் பதவியைத் தருகிறேன். இங்கே வரும் என் அடியவர்களின் தலையெழுத்தை திருத்தி அருளுவாயாக’ என்றார் சிவனார். ‘விதி இருப்பின் விதி கூட்டி அருளுக’ எனும் அருளுரைக்கு ஏற்ப, திருப்பட்டூர் தலத்துக்கு வரும் அன்பர்கள் அனைவருக்கும் தலையெழுத்தைத் திருத்தி அருளுகிறார் பிரம்மா என விவரிக்கிறார் கோயிலின் பாஸ்கர குருக்கள்.

ஆடி மாதத்தின் வியாழக்கிழமையில், பிரம்மாவை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். திருப்பட்டூர் பிரம்மாவை வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்யுங்கள். நம் தலையெழுத்தையே திருத்தி அருளுவார்.

ஓம் பரமேஸ்வராய வித்மஹே
பர தத்வாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

அதேபோல்,


ஓம் சுராராத்யாய வித்மஹே
வேதாத்மநாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தை மனதாரச் சொல்லுங்கள்.

ஓம் ஹம்சாரூதாய வித்மஹே
கூர்ச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தையும்...

ஓம் வேதாத்மஹாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

எனும் மந்திரத்தையும் தொடர்ந்து வியாழக்கிழமைகளில் சொல்லுங்கள்.

ஓம் தத்புருஷாய வித்மஹே
சதுர்முகாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

முதலான மந்திரங்களை, 11 முறை 24 முறை 54 முறை முடிந்தால் 108 முறை பாராயணம் செய்யுங்கள்.


திருப்பட்டூர் பிரம்மாவை நினைத்து, உங்கள் வேண்டுதல்களைச் சொல்லி, மஞ்சள் துணியில் 11 ரூபாய் முடிந்து வைத்து கோரிக்கைகளை பிரம்மாவிடம் வையுங்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலையும் மாலையும் பாராயணம் செய்து வழிபடுவது நல்லது. முடிந்தால், காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்ம மந்திரம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார் திருப்பட்டூர் பிரம்மா.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x