

'வாழும் கலை' அமைப்பு சார்பில் வரும் 26-ம் தேதி ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வாழும் கலை அமைப்பின் முதுநிலை ஆசிரியர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுமான கே.ஆர்.தாமோதரன், சசிரேகா கோவையில் இன்று (ஜூலை 22) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ஸ்ரீஸ்ரீரவிசங்கருடன் உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய உள்ளனர். சக்திவாய்ந்த கந்த சஷ்டி கவச மந்திரங்கள், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, பதற்றத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
தமிழ்க் குடும்பங்களின் பிரார்த்தனைகளில் பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படுகிறது. அது வீரம் மற்றும் மன வலிமையை அளித்து, மக்களைப் பாதுகாக்கும் கவசம் என்று நம்பப்படுகிறது. வரும் 26-ம் தேதி ஆடி சஷ்டியின்போது கந்த சஷ்டி பாராயணத்தை ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நடத்துகிறார். இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தமிழ் மொழி பேசும் மக்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.
மேலும், உலகெங்கும் உள்ள மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், தமிழ்ச் சங்கங்கள், முருகர் பக்தி பேரவைகள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள், இந்து அமைப்புகள், கிராமப் பூசாரிகள் பேரவை, துறவியர் சங்கம், கோயில்கள், கல்வி நிறுவனங்கள், சிறுதொழில்முனைவோர் சங்கங்கள் இந்த கந்த சஷ்டி கவசம் மகா பாராயணத்தில் பங்கேற்கின்றன. மேலும், இந்நிகழ்ச்சி சமூக வலைதளங்கள், பக்தி சேனல்கள், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்".
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.