திங்கட்கிழமை... ஆடி அமாவாசை... அமா சோமவாரம்; அரச மரத்தை வலம் வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்! 

திங்கட்கிழமை... ஆடி அமாவாசை... அமா சோமவாரம்; அரச மரத்தை வலம் வந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்! 
Updated on
1 min read

அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோமவாரம் என்கிறது சாஸ்திரம். அந்த நாளில் அரச மரத்தை வழிபட்டு வலம் வருவது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் என்று விவரிக்கின்றன ஞானநூல்கள். இதையே அஸ்வத்த பிரதட்சணம் என்கிறார்கள்.

அரச மரம், ஆன்மிகத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஒவ்வொரு நாளும் அரச மரத்தைச் சுற்றி வலம் வருவதால் ஒவ்வொரு நன்மைகள் உண்டாகும் என்று ஆச்சார்யர்கள் விளக்கியுள்ளனர்.

அரச மரத்தை ஞாயிற்றுக்கிழமையில் வலம் வந்தால் தீராத நோயும் தீரும் என்பார்கள்.

திங்கட்கிழமையன்று வலம் வந்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும். செவ்வாய்க் கிழமையில் வலம் வந்தால், செவ்வாய் தோஷங்கள் விலகும். புதன்கிழமையில் அரசமரத்தை வலம் வந்தால், வியாபாரம் பெருகும். வியாழக்கிழமையில் வலம் வந்தால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். வெள்ளிக்கிழமையில் அரசமரத்தை வலம் வந்தால், சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம். சனிக்கிழமையில் வலம் வந்து வணங்கினால், சர்வ கஷ்டங்களும் விலகி மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம்.

எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கும் தனித்தனியே பலன்கள் இருக்கின்றன என்கிறார் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்.
மூன்று முறை வலம் வந்தால் இஷ்ட ஸித்திகளும் அடையலாம். நினைத்ததை அடையலாம். ஐந்து முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கப் பெறலாம். ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறலாம். வம்சம் விருத்தியாகும். பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம். நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் நடத்திய பலன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறார்.

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரச மரத்தை வழிபட்டு, அதை ஸ்ரீமந் நாராயண சொரூபமாகவே பாவித்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

மூலதோ பிரம்மரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபினே
அக்ரத: சிவ ரூபாய
விருக்ஷ ராஜயதே நம:

இந்த ஸ்லோகத்தை மனதிற்குள் சொல்லிக்கொண்டு வலம் வரவேண்டும். தங்கள் சக்திக்கு ஏற்ப பழமோ அல்லது வேறு பொருளோ மரத்தின் முன்னே சமர்ப்பிக்க வேண்டும். நூற்றியெட்டு முறை பிராகார வலம் வந்து முடிந்ததும் அவற்றை தானமாக அளிக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இந்த வழிபாட்டு அமாசோமவார விரதம் எனப்படுகிறது. அன்றைய தினம் அன்னதானம் செய்யலாம். எவருக்கேனும் வஸ்திர தானம் செய்யலாம்.

அமாவாசையும் திங்கட்கிழமையும் இணைந்து வரும் இந்த அற்புத நாளில் அரச மரத்தை வணங்கி நலம் பெறுவோம். நாளைய தினம் ஆடி அமாவாசை (20.7.2020). மறக்காமல், அருகில் உள்ள அரசமரத்தை வலம் வந்து வேண்டுங்கள். வேண்டியதெல்லாம் கிடைக்கப் பெற்று இனிதே வாழ்வீர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in