Last Updated : 19 Jul, 2020 11:39 AM

 

Published : 19 Jul 2020 11:39 AM
Last Updated : 19 Jul 2020 11:39 AM

ஆடி அமாவாசை; தம்பதி சகிதமாக, குடும்ப சமேதராக முன்னோரை வழிபடுங்கள்; முன்னுக்கு வருவீர்கள்! 

ஆடி அமாவாசையில், முன்னோர்களை வணங்குவதும் முன்னோர்களை நினைத்து குடும்பமாக வழிபடுவது மிகப்பெரிய புண்ணியம். எனவே, ஆடி அமாவாசையில், முன்னோர் படத்துக்கு குடும்ப சகிதமாக வழிபட்டு, நமஸ்கரியுங்கள். பித்ரு சாபத்தில் இருந்து விடுபடுங்கள்.

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கான நாள். தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கத்தில் வருகிற அமாவாசை, ஆடி அமாவாசை என்றும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் சொல்லப்படுகிறது.

பித்ரு லோகத்தில் இருந்து ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள் ஆடி அமாவாசையின் போது பூமிக்கு வருகிறார்கள். இந்தநாளில், முன்னோரை வழிபடவேண்டும். அவர்களின் அருளையும் ஆசியையும் பெறவேண்டும்.

நாளைய தினம் 20ம் தேதி திங்கட்கிழமை ஆடி அமாவாசை. முன்னதாக, முதல்நாள், வீட்டை சுத்தம் செய்யுங்கள். ஒட்டடை முதலானவற்றை அகற்றுங்கள். பூஜையறையில் உள்ள பொருட்களை கழுவி சுத்தமாக்குங்கள். விளக்குகளை தேய்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

சுவாமி படங்கள், முன்னோர்களின் படங்கள் ஆகியவற்றைத் துடைத்து சுத்தம் செய்து மாட்டுங்கள். வீட்டைக் கழுவிவிடுவதோ துடைப்பதோ செய்யுங்கள். மறுநாள், அமாவாசை நாளில் பெண்கள் தலைக்குக் குளிக்கவேண்டும்.

ஆறு, குளம் முதலான நீர் நிலைகளுக்குச் சென்று முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். அங்கே ஆச்சார்யர்களைக் கொண்டு, தர்ப்பணம் செய்யவேண்டும். தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி, முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி, எள்ளும் தண்ணீரும் கொண்டு அர்க்யம் விடவேண்டும். வீட்டிலேயே தர்ப்பணம் செய்வதும் சிறப்புக்கு உரியதுதான். ஆச்சார்யரை அழைத்து வீட்டிலேயே தர்ப்பணம் செய்து வழிபடலாம்.

பின்னர், ஆச்சார்யர்களுக்கு நம்மால் முடிந்த தட்சணையையும் அரிசி மற்றும் வாழைக்காயை, வெற்றிலை பாக்குடன் வழங்கி நமஸ்கரிக்கவேண்டும்.
வீட்டுக்கு வந்து, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் என வழக்கம் போல் இட்டுக்கொள்ளலாம். வாசலிலும் பூஜையறை மாடத்திலும் பெண்கள் கோலமிட்டு, விளக்கேற்றவேண்டும்.

சுவாமி படங்கள், குலதெய்வப் படங்கள், முன்னோர் படங்கள் ஆகியவற்றுக்கு சந்தனம் குங்குமமிட்டு, பூக்களால் அலங்கரிக்கவேண்டும். முன்னோருக்குப் பிடித்தமான உணவைக் கொண்டு நைவேத்தியம் செய்யவேண்டும்.

பின்னர் தூப தீப ஆராதனைகள் செய்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக முன்னோர் படங்களுக்கு முன்னே நின்று, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். உங்களின் குறைகளையும் கவலைகளையும் அவர்களிடம் சொல்லி கோரிக்கையாக வைத்து பிரார்த்தனை செய்து, நமஸ்கரியுங்கள். பின்னர், வீட்டில் செய்துள்ள சாம்பார், ரசம், காய்கறிகள், கூட்டு, சாதம் முதலானவற்றில் நெய்யும் விட்டு, காகத்துக்கு உணவிடுங்கள்.

முன்னதாக, காகத்துக்கு உணவிடும் இடத்தை தண்ணீர் விட்டு சுத்தப்படுத்திவிட்டு, பிறகு உணவளியுங்கள். காகம் என்பது நம் முன்னோர் அம்சம் என்கிறது சாஸ்திரம். காகம் என்பது சனி பகவானின் வாகனம். எனவே காகத்துக்கு உணவிடுவதால், அமாவாசை வழிபாடு பூர்த்தி அடைகிறது.

மேலும் நம் வழிபாட்டாலும் பூஜைகளாலும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர்கள் அகம் குளிர்ந்து போகிறார்கள். இதனால் பித்ரு சாபம் உள்ளிட்டவை நீங்கும் என்றும் சனி முதலான கிரக தோஷங்கள் விலகும் என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பொதுவாகவே, வீட்டில் பூஜை செய்யும்போது, தம்பதி சமேதராகவும் குடும்ப சகிதமாகவும் வழிபடவேண்டும் என்று வலியுறுத்துகிறது தர்ம சாஸ்திரம். முக்கியமாக, அமாவாசை மாதிரியான தருணங்களில், முன்னோர் வழிபாடு செய்கிற வேளையில், குடும்பத்தினர் மொத்தமாகவும் சேர்ந்து நமஸ்கரித்து பிரார்த்திக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். முன்னோர் வழிபாடு, உங்களை முன்னுக்குக் கொண்டுவரும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x