

ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான முறையில், பல தெய்வங்களை வழிபடச் சொல்லி வழிகாட்டியிருக்கிறார்கள் முன்னோர்கள். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் மட்டுமில்லை. மொத்தத்தில் வழிபாட்டுக்கு உரிய மாதமும் கூட.
ஆடி மாதத்தில், ஏகாதசியும் துவாதசியும் மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தால், சகல செளபாக்கியங்களையும் பெறலாம்.
அதேபோல், கஜேந்திர மோட்சம் குறித்து புராணம் சொல்லும் தகவல்கள் தெரியும்தானே.
கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானையானது ’ஆதிமூலமே... எம்மைக் காப்பாய்’ என்று கதறி அலறியது. உடனே மகாவிஷ்ணு தன் சக்ராயுதத்தை ஏவினார். யானையைக் காப்பாற்றினார். இதை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதத்தில், பெருமாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் பலவற்றிலும் கஜேந்திர மோட்சம் வைபவமாக நடத்தப்படும். பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
எனவே ஆடி மாத சனிக்கிழமைகளில், வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு துளசி சார்த்தி, விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் செய்வது நம் வாழ்வின் தடைகளையெல்லாம் தகர்க்கும். மனோபலம் பெருகும். மங்கல காரியங்கள் இல்லத்தில் நடந்தேறும். ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ அருள் செய்வார் பெருமாள்.
அரசமரத்துக்கும் நம் ஆன்மிக வழிபாட்டுக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. அரசமரமும் அதில் பட்டு வருகிற காற்றும் நம் புத்தியைத் தெளிவாக்கும். மனதை தெளிவுபடுத்தும். எந்தச் செயலைச் செய்தாலும் திறம்படச் செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். அதனால்தான் அரசமரத்தில், பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டன. வழிபடப்பட்டு வருகின்றன.
ஆடி மாதத்தில், ஏகாதசி, துவாதசி ஆகிய நாட்களில் மறக்காமல், அரசமரத்தைச் சுற்றி வந்து வழிபடச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
உக்கிரமான தெய்வத்தை வணங்குவது அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வணங்குவது இன்னும் நம் வாழ்வில் பலம் சேர்க்கும். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கும்.
நெல்லையில் தீப்பாய்ச்சி அம்மன் ஆலயத்தில், ஆடி மாதத்தில் ஒருமுறையேனும் குடும்பமாக வந்து தரிசித்துச் செல்வார்கள் மக்கள்.
தஞ்சாவூரில் நிசும்பசூதனி கோயில் உள்ளது. சோழர்களின் காவல்தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் திகழ்ந்தவள் நிசும்பசூதனி. உக்கிர தெய்வம். ஆடி மாதத்திலும் ஆடிப்பெருக்கு நாளிலும் இவளை வணங்குவதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் என்பது உறுதி என்கிறார்கள் பக்தர்கள்.
திருச்சி உறையூர் பகுதியை அடுத்து குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இந்தத் தலத்து நாயகியும் உக்கிரமான தெய்வம்தான். இவளை ஆடி மாதத்தை நினைத்து, விளக்கேற்றி வைத்து வீட்டில் இருந்தபடியே கண்கள் மூடி வேண்டிக்கொண்டாலே போதும்... துஷ்ட சக்திகளும் எதிர்மறை எண்ணங்களும் நம்மை விட்டும் நம் இல்லத்தை விட்டும் ஓடியே போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.