Last Updated : 17 Jul, 2020 02:29 PM

 

Published : 17 Jul 2020 02:29 PM
Last Updated : 17 Jul 2020 02:29 PM

ஆடி முதல்வெள்ளி; அம்பாளுக்கு கேசரி

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளை வணங்கிக் கொண்டாடுவோம். மாலையில் விளக்கேற்றி கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து மகாசக்தியை வழிபடுவோம். சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வாள் தேவி.

அம்பாளுக்கு உரியது ஆடி மாதம். அவளின் மகா சக்தியானது, உலகம் முழுக்க வியாபித்து தீய சக்தியை வெளிப்படுத்தும் அற்புதமான மாதம். கோடை காலம் முடிந்து அடுத்த குளிர்காலத்துக்கு நடுவிலான இந்தக் காலகட்டத்தில் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் தாக்கலாம்.

உக்கிரமான சக்தியாகத் திகழும் அம்மனை குளிர்விக்க, அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும். மஞ்சள், வேப்பிலை அனைத்துமே கிருமிநாசினிகள். தெருவெங்கும் வேப்பிலையும் மாவிலையும் கொண்டு தோரணம் கட்டுவார்கள். வீட்டு வாசலிலும் தோரணம் கட்டுவார்கள்.

இவையெல்லாமே உஷ்ணத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை விடுவிக்கும். பூமியைக் குளிரப்படுத்தும். தீயசக்திகளை அண்டவிடாமல் விரட்டித் துரத்தும்.
அதேபோல், அம்மனுக்கு கூழ் வார்த்தல் எனும் வைபவமும் ஆடி மாதத்தில் நிகழும். கூழுக்கு குளிர்ச்சிப்படுத்தும் தன்மை உண்டு. அதனால்தான் ஆடி மாதத்தில், அம்மன் கோயில்கள் அனைத்திலும் கோலாகலம் நிரம்பி வழியும். கூழ் வார்த்தல், ஆடிப்படையல் என அமர்க்களப்படும்.

அதேபோல், கிராமங்களில், ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே, மஞ்சள் தெளித்து, சாணம் தெளித்து, வாசலில் வேப்பிலைத் தோரணங்கள் கட்டுவார்கள். முகத்துக்கு மஞ்சள் பூசி, வீட்டில் சாம்பிராணி தூபமிட்டி, அம்பிகையை ஆராதிப்பது எல்லா ஊர்களிலும் எல்லா வீடுகளிலும் உண்டு.

ஆடி மாதம் நேற்றைய தினம் பிறந்துவிட்டது. இன்று ஆடி வெள்ளிக்கிழமை. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை. இந்த அற்புதமான நாளில், வீட்டில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கிக் கொள்ள, அன்னையின் சக்தி இல்லத்தில் வியாபிக்க, அம்பிகையை வழிபடுங்கள். மாலையில் பூஜையறையில் கோலமிடுங்கள். வாசலில் கோலமிடுங்கள். விளக்கேற்றுங்கள். அம்பாள் துதியைப் பாராயணம் செய்யுங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லுங்கள்.

கேசரி அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள். அக்கம்பக்கத்தாருக்கும் வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையையே இனிக்கச் செய்வாள் அம்பிகை. சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வாள் தேவி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x