Last Updated : 16 Jul, 2020 07:23 PM

 

Published : 16 Jul 2020 07:23 PM
Last Updated : 16 Jul 2020 07:23 PM

ஆடி ஏகாதசி, துவாதசியில் வேங்கடாசலபதி வழிபாடு; வேதனைகள் தீரும்; சோதனைகள் அகலும்! - ஆடி ஸ்பெஷல்


வேங்கடவனை ஆடி மாதத்து ஏகாதசியிலும் துவாதசியிலும் வேண்டுங்கள். ஒவ்வொரு மாதத்திலும் பிரார்த்தனை செய்யுங்கள். வேதனைகளையெல்லாம் தீர்த்தருள்வார் ஸ்ரீமந் நாராயணன். சோதனைகளையெல்லாம் அகற்றுவார்.

ஆடி மாதத்தில் அம்மன் வீரியத்துடனும் சக்தியுடனும் இருக்கிறாள் என்பதாக ஐதீகம். இந்த மாதத்தில், தன்னை நாடி, குறைகளையெல்லாம் சொல்லி முறையிடும் பக்தர்களின் கண்ணீரைத் துடைத்து அருளுகிறாள் தேவி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

அம்பாள் மட்டுமின்றி, மகாவிஷ்ணுவும் தன் பக்தர்களின் தேவைகளை, வேண்டுதல்களை, பிரார்த்தனைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருகிறார், இந்த ஆடி மாதத்தில்!

ஆமாம்... அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சுக்ல பட்ச துவாதசி திதியில், காலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமமிடுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து கேட்டு பெருமாளை வழிபடலாம்.

துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். முடியுமெனில், சுக்ல பட்ச ஏகாதசியிலும் மறுநாள் துவாதசியிலும் என இரண்டு நாட்களும் பெருமாளை வழிபடலாம். காலையிலேயே நீராடி, பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து வழிபடுங்கள்.
ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் என பிரித்துக் கொண்டு நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடுங்கள். ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும். உங்கள் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து அருளுவார் வேங்கடாசலபதி.

ஏகாதசி திதியில், மகாவிஷ்ணுவை வழிபட்ட பின்னர், ஐந்து பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். தனம் - தானியம் பெருகும். அசையாப் பொருட்கள் வீடு மனை என வாங்கும் யோகம் கிட்டும்.

வீட்டில் சிக்கல், பிரச்சினை என்றிருந்த கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். நல்ல உத்தியோகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி, துவாதசி என்றில்லாமல், மாதந்தோறும் ஏகாதசி, துவாதசியில் பெருமாள் வழிபாடு செய்வதும் ஏகாதசி திதி நாளில், ஐந்து பேருக்கோ உங்களால் முடிந்த அளவுக்கோ ஏதேனும் உணவுப்பொட்டலம் வழங்கி வருவதும் பாவங்களையெல்லாம் போக்கும். புண்ணிய பலன்கள் பெருகும்.

வேங்கடவனை ஏகாதசியிலும் துவாதசியிலும் வேண்டுங்கள். வேதனைகளையெல்லாம் தீர்த்தருள்வார் ஸ்ரீமந் நாராயணன். சோதனைகளையெல்லாம் அகற்றுவார் வேங்கடாசலபதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x