Last Updated : 16 Jul, 2020 06:02 PM

 

Published : 16 Jul 2020 06:02 PM
Last Updated : 16 Jul 2020 06:02 PM

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சி சமயபுரத்தா! - தாலியிலும் குங்குமத்திலும் குடியிருப்பார்கள் ; ஆடி ஸ்பெஷல்

பனிரெண்டு மாதங்களில், வேறு எந்த மாதத்திலும் ஆடி மாதம் போல் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களும் இல்லை. விரதங்களும் கிடையாது. விசேஷ தினங்களும் வேறு மாதத்தில் இல்லை. அத்தனை பெருமைகளை உள்ளடக்கிய மாதமாகத் திகழ்கிறது ஆடி.

ஆடி மாதத்தில் ஏகாதசியில் தொடங்கி, கார்த்திகை மாதத்தின் ஏகாதசி வரைக்கும் ஒவ்வொரு ஏகாதசியிலும் பெருமாள் வழிபாடு செய்வார்கள் பக்தர்கள். அதேபோல், ஆடி மாதத்தின் வளர்பிறை துவாதசி திதியில் தொடங்கி கார்த்திகை மாதத்தின் வளர்பிறை துவாதசி வரை, ஒவ்வொரு துவாதசியின் போதும் பெண்கள் துளசி பூஜையைச் செய்து வந்தால், அந்த வீட்டில் பெண்கள் மதிக்கப்படுவார்கள். பெண்களால் அந்த வீடு வளர்ச்சியும் கெளரவமும் பெறும். வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைத்து இல்லத்தில் சுபிட்சம் நிலவும்.

எனவே, ஆடி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியின் போது பெண்கள், துளசி பூஜை செய்யுங்கள். துளசி மாடத்துக்கு மஞ்சள் குங்குமமிட்டு விளக்கேற்றி, கோலமிட்டு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யுங்கள். துளசி தீர்த்தம் பருகி, நாராயண நாமம் சொல்வது இன்னும் விசேஷம்.

ஆடி மாதம் சக்திக்கு உரிய மாதம். சக்தி என்பது பெண் தெய்வம். பெண் தெய்வங்களுக்கெல்லாம் தலைவி இருக்குமிடம் தலைமை பீடம். அந்த தலைமை பீடம்... காஞ்சியம்பதி என்று போற்றப்படும் காஞ்சிபுரம். அப்படியெனில் சக்தி பீடங்கள் அனைத்துக்கும் தலைவி..? பிறகென்ன... காமாட்சி அன்னைதான். அவளே சகல சக்தி பீடங்களுக்கும் தலைவி. தானைத்தலைவி.

ஆடி மாதத்தின் செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் காமாட்சி அன்னையை வழங்குவது, பலம் சேர்க்கும். வளம் தரும்.வீட்டில் இதுவரை தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் அனைத்தும் விரைவிலேயே நடந்தேறும். தோஷங்கள் அனைத்தும் விலகும். கல்யாண மாலை தோள் சேரும்.
காமாட்சி அன்னை இப்படியென்றால்... மீனாட்சி அன்னைக்குக் கேட்கவா வேண்டும்?

தென் பாண்டி நாட்டுக்கே அரசியல்லவா. மதுரை அரசாளும் மீனாட்சியாயிற்றே. அவளை வழிபடவும் இந்த ஆடிச் செவ்வாயும் ஆடி வெள்ளியும் அற்புதமான நாட்கள். மனமுருகி மீனாட்சி அம்பாளை வழிபட்டு வந்தால், உங்கள் குங்குமத்திலும் தாலியிலும் சூட்சுமமாக அமர்ந்துகொண்டு ஆட்சி செய்வாள் மீனாட்சி அன்னை. குடும்பத்தில் எப்போதும் ஒற்றுமை பலப்படும். கருத்து வேற்றுமைக்கே இடமில்லாமல் செய்துவிடுவாள் மீனாட்சி அம்பாள்.

சக்தி பீடங்களுக்கெல்லாம் தலைவி காமாட்சி. மதுரையையே அரசாளும் மீனாட்சி. ஆனாலும் ஆடி மாதத்தின் நாயகி மாரியம்மன் தான்! எங்கு பார்த்தாலும் எந்த ஊராக இருந்தாலும் அங்கே மாரியம்மனுக்கு ஆலயம் இருப்பதை தரிசிக்கலாம். முத்து மாரியம்மன், சக்தி மாரியம்மன், தேவி மாரியம்மன், கருமாரியம்மன் என்று எத்தனையோ மாரியம்மன்கள். அத்தனை மாரியம்மன்களுக்கும் தலைவி... ஆத்தா சமயபுரத்தாள்தான்.

சின்னச் சின்ன நோய்கள் முதல் பெரிய பெரிய பிரச்சினைகள் வரை, ’ஆத்தா... சமயபுரத்தா... நீதான் பாத்துக்கணும்மா’ என்று அவளைச் சரணடைந்தால் போதும். பிறகு அவள் நம்மைப் பார்த்துக் கொள்வாள். உலகில் எந்த ஊரில் இருந்தாலும், நம் கவலைகளை, வேதனைகளை, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி நாட்களில், சமயபுரத்தாளை நினைத்து, மஞ்சள் துணியில் ஒருரூபாய் முடிந்து வைத்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, திருச்சி சமயபுரத்தாள் மூவரையும் மனதார வேண்டுங்கள். மனமுருகி வேண்டுங்கள்.
தடைகள் அனைத்தையும் தகர்ப்பார்கள். தங்குதடையில்லாமல் சந்தோஷத்தையும் நிம்மதியையும் தந்தருள்வார்கள்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x