Last Updated : 16 Jul, 2020 02:40 PM

 

Published : 16 Jul 2020 02:40 PM
Last Updated : 16 Jul 2020 02:40 PM

ஆடி ஸ்பெஷல் :  திக் தேவதை வழிபாடு; அம்மனுக்கு காய்கறிகள்; பெளர்ணமியில் ஹயக்ரீவ பிரார்த்தனை;  உக்கிர தெய்வங்களுக்கு தீபம்! 

ஆடி மாதம் முழுக்கவே வழிபாட்டுக்கு உரிய மாதம்தான். பிரார்த்தனைகள் செய்யச் செய்ய, குடும்பத்தின் மேன்மை கூடும். இல்லத்தில் நிம்மதி நிலவும். வாழ்வில் ஏற்றம் நிச்சயம்.

ஆடி மாத பெளர்ணமி, ஆடி அமாவாசையைப் போலவே மகத்தான நாள். மாதந்தோறும் அமாவாசையும் பெளர்ணமியும் வந்தாலும் அவை சிறப்பான வழிபாட்டுக்கு உரிய நாளாக இருந்தாலும் ஆடி மாதத்தின் பெளர்ணமியும் அமாவாசையும் ரொம்பவே சிறப்புக்கு உரியவை.

ஆடி பெளர்ணமியில்தான் கல்விக்கடவுளான ஹயக்ரீவரின் அவதாரம் நிகழ்ந்தது என்கிறது புராணம். எனவே ஆடி பெளர்ணமியில், வீட்டில் விளக்கேற்றி, வேங்கடவனை குழந்தைகள், மாணவர்கள் வழிபடலாம். ஹயக்ரீவ காயத்ரீயையும் ஸ்லோகத்தையும் வழிபடுவது புத்தியில் தெளிவைக் கொடுக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

ஆடி மாதம் ஒரு விளைச்சல் முடிந்து அடுத்து விதைக்கும் மாதம். ஆடிப்பட்டம் தேடி விதை என்றொரு முதுமொழி உண்டு. நிலங்களில் விளைந்த காய்கறிகளைக் கொண்டு, கிராமத்தில் உள்ள அம்மன்களுக்கு வழங்குவார்கள். நிலமில்லாதவர்களும் காய்கறிகளை வழங்கும் வழக்கம் பின்னாளில் வந்தது. அந்தக் காய்கறிகளையும் கனிகளையும் கொண்டு, அம்மனுக்கு அலங்காரம் நடைபெறும். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், காய்கறிகளைக் கொண்டு கதம்ப சாதம் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

ஆடி மாதத்தின் சுக்ல பட்ச தசமி விசேஷமானது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இந்த நாளில், திக் தேவதா விரதம் மேற்கொள்வது வழக்கம். திக் என்றால் திசை. தேவதா என்றால் தேவதைகள். எட்டுத் திசைகளுக்கும் தேவதைகள் உண்டு. இவர்கள் நம்மைச் சூழ்ந்து, நமக்குள் நல்ல எண்ணங்களைக் கொடுப்பார்கள். இல்லத்திலும் உள்ளத்திலும் பீடை, தரித்திரம் முதலான துஷ்ட சக்திகளை அண்டவிடாமல் காப்பார்கள். ஆகவே, சுக்ல பட்ச தசமி திதியில், திக் தேவதையை மனதில் நிறுத்தி வழிபடுவார்கள்.

அப்போது, வீட்டில் சாம்பிராணி புகை ஏற்றி, வீட்டின் எட்டுத்திக்குகளுக்கும் சாம்பிராணி புகை காட்டி வழிபடுவார்கள். இதனால், தீயசக்திகள் அண்டாது என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தின் சுக்ல பட்ச ஏகாதசி இன்னும் விசேஷமானது. ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி வரை ஏகாதசி விரதம் மேற்கொள்வார்கள். அதாவது, ஆடி மாத சுக்ல பட்ச ஏகாதசி, ஆவணி மாத சுக்ல பட்ச ஏகாதசி, புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி, ஐப்பசி மாத சுக்ல பட்ச ஏகாதசி, கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி முதலான ஏகாதசி நாட்களில் விரதம் இருந்து வேங்கடவனை, மகாவிஷ்ணுவை, திருமாலை வழிபாடு செய்வார்கள். இதன் பின்னர், மார்கழியும் வந்துவிடும். வைகுண்ட ஏகாதசியும் வந்துவிடும். அப்போது விரதம் மேற்கொண்டு பரமபத வாசலில் பரமனைத் தரிசித்தால், மோட்சம் நிச்சயம் என்பது ஐதீகம்.

இதனால், வீட்டில் ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பலம் பெருகும். மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். சந்தான பாக்கியம் எனும் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திக் தேவதைகள் போலவே கிராம தேவதைகளையும் ஆடி மாதத்தில் வழிபடுவது மிகவும் சிறப்புக்கு உரியது. கிராம தேவதைக் கோயில்களுக்கு நம்மால் முடிந்த திருப்பணிகளைச் செய்யலாம். கிராம தேவதை அம்மனுக்கு புடவை அல்லது வஸ்திரம் வழங்கி வழிபடலாம். அன்னதானத்துக்கு அரிசி வழங்கலாம். விளக்கேற்றுவதற்கு எண்ணெய், திரி வழங்கலாம்.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில், துர்கை முதலான உக்கிர தெய்வங்களுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவது எதிர்ப்புகளையெல்லாம் ஒடுக்கவல்லது. எதிரிகளை பலமிழக்கச் செய்யும் என்கிறார்கள் அம்மன் பக்தர்கள். ஆடி மாதத்தின் அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் முடிந்தால் வெள்ளிக்கிழமைகளிலும் எலுமிச்சை தீபமேற்றி வழிபடலாம்.

இதேபோல், வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், நெய் தீபமேற்றி வணங்குவது கடன் முதலான பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும். தீராத நோயும் தீரும். தாலி பாக்கியம் நிலைத்திருக்கும். வழக்குச் சிக்கல்களில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்யும் பக்தர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x