

இரட்டை மஸ்தான் தர்கா, தஞ்சை நகரின் நடுநாயகமாக புது ஆற்றின் வலதுபக்கத்தில் அமைந்திருக்கிறது. தந்தையும் புதல்வருமாக இருவர் இங்கு அடக்கமாகியிருப்பதால் இரட்டை மஸ்தான் தர்கா என்று அழைக்கப்படுகிறது. தந்தையார் பெயர் சையிது ஷா முகம்மது சக்காப். புதல்வர் சையிது ஷா நியமத்துல்லா சக்காப்.
சக்காப் என்ற குடும்பப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். ஞானயோகத்தில் ஈடுபட்டிருந்த சையிது அப்துல் ரஹ்மான் என்பவருக்கு நபிகள் நாயகம் காட்சிதந்து சக்காப் என்ற பட்டத்தை அளித்ததாகக் கூறப்படுகிறது. சக்காப் பரம்பரையினர் ஏமன் முதலான நாடுகளில் வாழ்ந்தனர். அந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஜாபர் சக்காப், பீஜப்பூர் சுல்தான் ஆதில்ஷாவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்தார். அவருடைய பேரன் சையிது ஷா சக்காப் அவர்களே முதன்முதலில் தஞ்சாவூருக்கு வந்தார்.
அப்துல் ஹலீம் என்ற சீடரே அவரை குடும்பத்தினருடன் தஞ்சைக்கு அழைத்துவந்தார். அங்கேயே தங்கி பல அற்புதங்களை நிகழ்த்திவந்தார் சையிது ஷா சக்காப். ஹிஜ்ரி 1169-ம் ஆண்டுக்கு முன்பே அவர் மறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களின் நினைவாக 1900-ம் ஆண்டில் தர்கா கட்டப்பட்டது.
மஸ்தானின் ஆசிகள்
தர்கா கட்டப்பட்ட நாளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் மக்கள் நேரில் வந்து தரிசித்துச் செல்கின்றனர். இரட்டை மஸ்தான் தர்காவை சக்காப் குடும்ப வாரிசுகளே நிர்வகித்து வருகின்றனர். இன, மத பேதமின்றி காலையிலும் மாலையிலும் இரட்டை மஸ்தான் தர்காவுக்கு தரிசனத்துக்காக மக்கள் வருகிறார்கள். குறிப்பாக, வியாழக்கிழமை மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை பெருங்கூட்டம் திரண்டு வருகிறது. தஞ்சை நகரவாசிகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாமல் தர்காவுக்கு வந்து செல்கிறார்கள்.
நோய்பிணிகளால் பாதிக்கப்பட்டோரும், பிள்ளைப்பேறு இல்லாதவர்களும், நியாயம் கிடைக்காமல் மனம் உடைந்தோரும் மஸ்தான் அவர்களின் ஆசியினால் நலம் பெறுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
இறைநேசர் மஸ்தான் அவர்களின் நல்லாசியை நாடி அன்றாடம் பல இனமக்களும் தஞ்சை தர்காவுக்கு வருகின்றனர். குணமடைந்ததும் மன நிறைவுடன் தங்கள் அனுபவங்களை அசைபோட்டபடி செல்கின்றனர்.